கூச்சிங்: அரசியல் மற்றும் மதவெறியர்களை சரவாக் மாநிலத்திற்குள் நுழைய மாநில அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் டத்தோ பாத்திங்கி அபாங் ஜொஹாரி ஒபெங் தெரிவித்தார்.
அவர்களின் இருப்பு மாநிலத்தின் பல மத சமூகங்களில் நிலவும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
“என் பதில் இதுதான். நாங்கள் அனைவரும் நல்லிணக்கத்தோடு வாழ்கிறோம்.” என்று அவர் கூறினார்.
சரவாக்கில் இன மற்றும் மத மோதல்கள் ஏற்படாது, ஏனெனில் இனங்களுக்கிடையேயான திருமணங்கள் இங்கு பொதுவானது என்று அவர் குறிப்பிட்டார்.
“கலப்பின சரவாக்கியர்கள் உருவாகுவதால் இனப்பிரச்சனைகள் இனி இங்கு இருக்காத காலம் வரும்,” என்று அவர் கூறினார்.
“நீங்கள் கவனித்திருந்தால், ஒரு மலாய் தாய் மற்றும் ஈபான் தந்தை என்றால், மலாய் அல்லது ஈபான் சமூகத்தைப் பற்றி விமர்சிப்பதிலிருந்து நீங்கள் கட்டுப்படுத்தப்படுகிறீர்கள்.”
“உங்கள் தாய் ஒரு சீனராகவும், தந்தை ஓர் ஈபானாகவும் இருந்தால், ஈபான் அல்லது சீனர்களின் உணர்வுகளை புண்படுத்தும் இனப்பிரச்சனைகளை நீங்கள் எழுப்ப விரும்பமாட்டீர்கள்.”
“அப்படி நீங்கள் செய்தால், உண்மையில் உங்கள் சொந்த தாய் அல்லது தந்தையையே நீங்கள் தாக்குகிறீர்கள்,” என்று அவர் விளக்கினார்.
மத நம்பிக்கையின் அடிப்படையில் தார்மீக ஒழுக்கத்தை வளர்க்கலாம் என்று மாநில அரசு நம்புகிறது என்று அபாங் ஜொஹாரி கூறினார்.
“எல்லா மதங்களும் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. எந்த மதமும் நம்மை மோசமாக இருக்கச் சொல்லவில்லை, ” என்று அவர் கூறினார்.
சரவாக்கியர்களிடையே பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வுக்கு மதம் முதுகெலும்பாகும் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.