சென்னை – இலங்கை வடக்கு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் மன்றத்தின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தமிழகத்திற்கு வருகை மேற்கொண்டு பல தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனைச் சந்தித்த விக்னேஸ்வரன், நடிகர் ரஜினிகாந்தையும் அவரது இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
தனது சந்திப்பின்போது இலங்கைக்கு வருமாறு ரஜினிக்கு விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்தார்.
2017-ஆம் ஆண்டிலேயே ரஜினிகாந்த் இலங்கை யாழ்ப்பாணம் செல்வதாக அறிவிக்கப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளரும், பிரிட்டனின் வணிகப் பிரமுகர்களில் ஒருவருமான சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு, அதற்கான நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.
எனினும், தமிழ்நாட்டின் பல தரப்புகளில் இருந்து ரஜினி இலங்கை செல்வதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதாலும் குறிப்பாக தொல்.திருமாவளவன், தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் போன்றவர்கள் கடும் எதிர்ப்பு காட்டியதாலும் தனது இலங்கை வருகையை ரஜினி அப்போது இரத்து செய்தார்.
தற்போது ரஜினி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தையும் தயாரித்திருப்பவர்கள் அதே லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தார்தான்.
இந்நிலையில் இலங்கைக்கு வருகை தரும்படி விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருப்பதால் ரஜினி இந்த முறை இலங்கை செல்லலாம் என கருதப்படுகிறது.
தொடர்ந்து தமிழக அரசியலில் ஈடுபடப் போவதாகக் கூறிவரும் ரஜினி இலங்கை செல்வதாலும், அங்கு தமிழர் தலைவர்களைச் சந்திப்பதாலும் அத்தகையப் பயணங்கள் ரஜினியின் அரசியலுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
தமிழகத்தில் எந்தவொரு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலிலும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை என்பது மிக முக்கியமான விவாதப் பொருளாக இருந்து வந்திருக்கிறது.