கோலாலம்பூர்: போதைப்பொருள் விவகாரத்தில் தனது அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர் உடனடியாக நீக்கம் செய்யப்படுவார் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
“சட்ட கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படுவதற்காக நான் முழுமையாக விட்டுவிடுகிறேன்.”
“சம்பந்தப்பட்ட இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் அதிகாரியையும் நான் நீக்கம் செய்வேன். இறுதி முடிவுகள் வரும் வரை காத்திருப்பேன்” என்று அவர் இன்று திங்கட்கிழமை சுருக்கமான செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
இன்று அதிகாலை தனது அதிகாரியை காவல் துறையினர் கைது செய்ததாக தனக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட அதிகாரியுடன், பல அமைச்சர்களின் அதிகாரிகளும் உடன் இருந்ததாகவும், மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் சம்பந்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் உட்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காவல் துறை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.