கோலாலம்பூர்: 1எம்டிபி குறித்த இறுதி தணிக்கை அறிக்கையை டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் அனுமதியின்றி அச்சிட முடியாது என்று முன்னாள் தணிக்கை இயக்குனர் உயர்நீதிமன்றத்தில் கூறினார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 29-ஆம் தேதியன்று தனது அலுவலகத்தில் இறுதி தணிக்கை அறிக்கையின் புதுப்பிக்கப்பட்ட வரைவை முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சாவிடம் ஒப்படைத்தபோது, தன்னிடம் இதை அவர் சொன்னதாக 65 வயதான சாடாதுல் நபிசா பாஷீர் அகமட் கூறினார்.
“நஜிப் அதற்கு சம்மதித்து உத்தரவு கொடுக்கும் வரை இறுதி தணிக்கை அறிக்கையை அச்சிட வேண்டாம் என்று அவர் எனக்குத் தெரிவித்தார்.”
“எனக்கு நினைவிருக்கிறபடி, ‘பச்சை விளக்கு’ கிடைக்கும் வரை அறிக்கையை அச்சிட வேண்டாம் என அலி கூறினார்” என்று இன்று திங்கட்கிழமை அவர் கூறினார்.
நஜிப் மற்றும் முன்னாள் 1எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா ஆகியோரின் கூட்டு பொது கணக்காய்வாளர் குழு விசாரணையில் தனது சாட்சிக் கூற்றை வாசித்த சாடாதுல், இந்த அறிக்கை நாட்டில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அலி தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்டார்.
“இது குறித்து நான் டான்ஸ்ரீ அம்ப்ரின் புவாங்கிற்கு அறிவித்தேன், அவர் அதைக் கவனித்தார்,” என்று அவர் மேலும் கூறினார்.
1எம்டிபி இறுதி தணிக்கை அறிக்கையில் திருத்தங்கள் செய்ய உத்தரவிட தனது பிரதமர் பதவியினைப் பயன்படுத்தியதாக நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 22 முதல் 26 வரை புத்ராஜெயாவில் அவர் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
நீதிபதி முகமட் ஜெய்னி மஸ்லான் முன்னிலையில் நாளை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) விசாரணைத் தொடரும்.