Home 13வது பொதுத் தேர்தல் அமைச்சர் பீட்டர் சின் 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை

அமைச்சர் பீட்டர் சின் 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை

610
0
SHARE
Ad

Peter-chinபுத்ரா ஜெயா, ஏப்ரல் 8 – சரவாக் மிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் எரிசக்தி, நீர்வளம், பசுமைத் தொழில்நுட்ப அமைச்சருமான பீட்டர் சின் பா குய் இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற தனது  முடிவில் எந்த மாற்றமும் இல்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 6 தவணைகளாக மிரி நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து அந்த தொகுதியைத் தற்காத்து வந்துள்ள பீட்டர் சின் இந்த முறை தனக்கு பதிலாக தனது அரசியல் செயலாளர் டத்தோ செபஸ்தியன் திங் என்பவரை மிரி தொகுதியில் போட்டியிட தான் பிரதமரிடம் சிபாரிசு செய்துள்ளதாகவும் கூறினார்.

பிரதமர்தான் இது குறித்து இறுதி முடிவு எடுப்பார் என்றாலும் தனது முடிவுக்கு மதிப்பளித்து பிரதமர் நஜிப் தனது அரசியல் ஓய்வை ஏற்றுக் கொள்வார் என தான் எதிர்பார்ப்பதாக பீட்டர் சின் கூறினார்.

#TamilSchoolmychoice

எஸ்யுபிபி (SUPP) என்ற சரவாக் மாநிலக் கட்சியின் தலைவருமான பீட்டர் சின், இந்த முறை தனது கட்சி சரவாக்கில் 7 தொகுதிகளில் போட்டியிடும் என்று மேலும் கூறினார்.

இருப்பினும், தான் இன்னும் கட்சித் தலைவராக பதவியில் நீடிப்பேன் என்றும், மிரி தொகுதியின் பிரச்சனைகளை தன்னால் இயன்றவரை கவனித்து தீர்வு கண்டு வருவேன் என்றும் கூறினார்.

2014ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெறும் எஸ்யுபிபி கட்சியின் தேர்தல்களின் போது கட்சி உறுப்பினர்களின் எண்ணங்களுக்கேற்ப தலைவர் பதவியில் தொடர்வதா இல்லையா என்ற முடிவை எடுக்கவிருப்பதாகவும் பீட்டர் சின் கூறினார்.

நீண்ட காலமாக மிரி தொகுதியை வெற்றிகரமாக தற்காத்து வரும் பீட்டர் சின் விலகலைத் தொடர்ந்து தேசிய முன்னணி கடுமையான போட்டியை எதிர்நோக்கும் மற்றொரு தொகுதியாக இந்த தொகுதி உருமாறும் எனத் தெரிகின்றது.

கடந்த பொதுத் தேர்தலில் மிரி தொகுதியில் ஜசெக வேட்பாளரை எதிர்த்து 5216 வாக்குகள் வித்தியாசத்தில் பீட்டர் சின் வென்றார்.

இந்த முறை 71,287 வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதியில் 57 சதவீதம் சீன வாக்காளர்கள் இருக்கின்றனர். முஸ்லிம் பூமிபுத்ராக்கள் 26 சதவீதமும், முஸ்லீம் அல்லாத பூமிபுத்ராக்கள் 16 சதவீதமும் இருக்கின்றனர்.