மிரி – உலகப் புகழ்பெற்ற முலு தேசியப் பூங்காவில் மாயமான ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கடந்த 4 நாட்களுக்கு முன் தேசியப் பூங்காவில், ஆண்ட்ரியூ கேஸ்கெட் (வயது 28) என்ற அந்நபர் தனியாக சாகசப் பயணத்தை மேற்கொண்ட போது மாயமாகியுள்ளார்.
அவர் அப்பூங்காவில் பயணம் செய்த வழித்தடங்கள் இன்னும் தெரியவில்லை. தேசியப் பூங்காவைப் பொறுத்தவரையில், குகைகள், பூமிக்கு அடியில் செல்லும் ஆறுகள், மலைகள், கூர்மையான சுண்ணாம்புச் சுவர்கள் ஆகியவை உள்ளன.
இந்நிலையில், மாயமான ஆண்ட்ரிரியூவைத் தேடி சுமார் 40 மீட்புக் குழுவினர் முலு சம்மிட், புக்கிட் சுசு மற்றும் ரேசெர்ஸ் கேவ் என மூன்று இடங்களில், கிராமவாசிகளின் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஆண்ட்ரியூவுக்கு வழிகாட்டியாக செயல்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த அக்டோபர் 27-ம் தேதி, அவர் பூங்காவினில் தனியாகப் பயணம் செய்ய விரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.
மிரியிலிருந்து 30 நிமிட விமானப் பயணத்தில் முலு அமைந்துள்ளது. ஆனால் அதனை ஆற்றின் வழியாகவும் அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.