சென்னை – தமிழகத்தில் எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் 3 இடைத் தேர்தல்களுக்கான பிரச்சாரங்கள் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம், விஜயகாந்த்தின் கட்சியான தேமுதிகவும் நேற்று வேட்பாளர்களை அறிவித்து போட்டியில் குதித்துள்ளதால், அவர்களின் தனித்த செல்வாக்கை நிரூபிக்கப் போகும் களமாகவும் இந்த இடைத் தேர்தல்கள் அமையப் போகின்றன.
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக, பாமக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த 3 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்துள்ளார்.
அரவக்குறிச்சியில் அரவை எம்.முத்து, தஞ்சாவூரில் வி.அப்துல்லா சேட், திருப்பரங்குன்றத்தில் டி.தனபாண்டியன் ஆகியோர் போட்டியிடுவார்கள்.
கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தல்களில், மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து படுமோசமாகத் தோல்வியைத் தழுவிய தேமுதிக, தனது தனித்த செல்வாக்கை தமிழகத்தில் நிரூபிக்க, அதற்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு இது என்பதால், அவர்களுக்கு கிடைக்கப் போகும் வாக்கு எண்ணிக்கை தமிழக அரசியல் கட்சிகளாலும், அரசியல் பார்வையாளர்களாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.