கோலாலம்பூர்: நாட்டின் மிகப்பெரிய நெடுஞ்சாலை நிறுவனமான பிளாஸ் மலேசியா பெர்ஹாட் (பிளாஸ்) விற்பனை செய்யப்படாது என்றும், அது அரசுக்கு சொந்தமானதாக இருக்கும் என்றும் புத்ராஜெயா முடிவு செய்துள்ளதாக பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
பிளாஸ் நிறுவனத்தை வாங்க ஆர்வமுள்ள தனியார் துறையினர் அளித்த அனைத்து விலைகள் மற்றும் ஏலங்களையும் அரசாங்கம் ஆய்வு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
“இறுதியில், பிளாஸ் நிறுவனம் யாருக்கும் விற்கக்கூடாது, ஆனால் அதை கசானா மற்றும் ஊழியர் சேமநிதி வாரியத்துடன் இருப்பதே சிறந்த வழி என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது” என்று கோலாலம்பூரில் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அதே நேரத்தில், விற்பனைக்கு இல்லை என்றாலும், கட்டண விகிதத்தை 18 விழுக்காடு பிளாஸ் குறைக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
“18 விழுக்காடு என்பது 30 ஆண்டுகளுக்கு என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்போது விகிதம் மிகக் குறைவாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
பிளாஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் அனைத்து நெடுஞ்சாலைகளுக்கான கட்டண விகிதத்தில் அதிகரிப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.