கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட் தமது பிரதமர் பதவியினை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்கும் தேதியை நிர்ணயிக்காமல் இருப்பதற்கு நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் குழுவுக்கு எந்த காரணமும் இல்லை என்று பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹாலிமி இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
கடந்த 2002-இல் நடந்தது போலதான் இதுவும் என்று நஜ்வான் தெரிவித்தார்.
அம்னோ தலைவராகவும், பிரதமராகவும் பதவி விலகுவதற்கான தனது முடிவை டாக்டர் மகாதீர் அறிவித்தபோது தேசிய முன்னணி தலைவர்கள் அவர் உடனடியாக விலகக்கூடாது என்று கேட்டுக் கொண்டதாக நஜ்வான் குறிப்பிட்டார்.
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தின் ஒரு கட்சித் தலைவர் பதவி விலகுவதை, விவாதித்து, ஒரு தேதியை நிர்ணயித்ததை அவர் சுட்டிக் காட்டினார். அதன் பிறகே அந்த பதவியை மகாதீர், அப்துல்லா அகமட் படாவியுடம் அவர் ஒப்படைத்தார்.
“2003-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதியன்று மகாதீர் தமது பிரதமர் பதவியை அப்துல்லா படாவியிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.”
“அதிகாரப் பரிமாற்றத்தின் தேதி வரையிலான காலகட்டத்தில், நாட்டின் நிர்வாகம் எந்தவொரு பெரிய பிரச்சனைகளும் சிக்கல்களும் இல்லாமல் சாதாரணமாக செயல்பட்டு வந்தது” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மே மாதம் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அன்வாரின் ஆதரவாளர்கள் விரும்பியபோது, நம்பிக்கைக் கூட்டணியின் புரிதலை தாம் இன்னும் மதிப்பதாகவும், ஆசிய–பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) மாநாட்டிற்குப் பிறகு அவ்வாறு செய்வதாகவும் மகாதீர் வலியுறுத்தினார்.
இந்த மாநாடு நவம்பரில் திட்டமிடப்பட்டுள்ளது.