Home One Line P1 விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்

878
0
SHARE
Ad

கோலாலம்பூர் – விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களின் சிறை வாழ்க்கை 100 நாட்களைக் கடப்பதை ஆட்சேபிக்கும் விதமாக, மனித உரிமை அமைப்பான சுவாராம் மற்றும் மஇகா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று சனிக்கிழமை இரவு (ஜனவரி 18) தலைநகரிலுள்ள சோகோ பேரங்காடியின் முன்னால் கூடி மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் நடத்தினர்.

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 12 பேர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் சொஸ்மா சட்டத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் அம்பிகா சீனிவாசனும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

#TamilSchoolmychoice

“மிகக் கடுமையான காலத்துக்கு ஒவ்வாத சொஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் பயங்கரவாத இயக்கத்தின் பேரில் 12 பேரைக் கைது செய்திருப்பதற்கு எதிராக எங்களின் எதிர்ப்பைக் காட்டுவதுதான் இந்த அமைதிப் போராட்டத்தின் நோக்கம்” என சுவாராம் இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் டி.சேவன் தெரிவித்தார்.

மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்ட மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினர்கள், இளைஞர் பகுதியினர் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சொஸ்மாவுக்கு எதிராக முழக்கமிட்டதோடு, 12 பேர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தனர்.

இந்த அமைதிப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இருதரப்பினரும் இணைந்து போராடிய போராட்டமாக நேற்றையப் போராட்டம் திகழ்ந்தது. ஜசெகவின் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பால் சிங், பிகேஆர் கட்சியின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், உலு கிளாங் சட்டமன்ற உறுப்பினர் சாரி சுங்கிப், பிகேஆர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ், ஜசெக சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜிவ் ஆகியோரும் இந்த அமைதிப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.