Home One Line P2 5ஜி தொழில்நுட்பம் விரைவில் – லங்காவி செயல்முறை விளக்கத் திட்டத்தை மகாதீர், கோபிந்த் சிங் பார்வையிட்டனர்

5ஜி தொழில்நுட்பம் விரைவில் – லங்காவி செயல்முறை விளக்கத் திட்டத்தை மகாதீர், கோபிந்த் சிங் பார்வையிட்டனர்

791
0
SHARE
Ad

லங்காவி – தொழில் நுட்பத் தொடர்புத் துறையில் அடுத்த கட்டப் பாய்ச்சலாக விளங்கப் போகும் 5ஜி தொழில்நுட்பத்தை மலேசியாவில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

அந்தத் திட்டத்திற்கான மருத்துவப் பிரிவு தொழில்நுட்பத்திற்கான செயல்முறை விளக்கத் திட்டம் லங்காவியில் உள்ள சுல்தானா மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் திட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் (ஜனவரி 19) பிரதமர் துன் மகாதீரும், தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும் நேரடியாகப் பார்வையிட்டு விளக்கங்கள் பெற்றனர். சுகாதாரத் துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய்யும் அப்போது உடனிருந்தார்.

சுமார் 30 நிமிடங்களுக்கு இந்தத் திட்டத்தை மகாதீர் பார்வையிட்டார். 5ஜி தொழில்நுட்பத்தின் மூலம் தொலைவிலிருந்து மருத்துவ ஆலோசனைகள் பெற முடியும் என்பதோடு, ஆம்புலன்ஸ் எனப்படும் அவசர சிகிச்சை வாகனத்திலும் பயன்படுத்தப்படும்.

#TamilSchoolmychoice

எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக 5ஜி தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பல சாதகங்கள் நிகழும் என்பதோடு, பொருளாதார ரீதியாகவும் பல பயன்கள் நாட்டில் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 5ஜி திட்டத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பு அம்சங்களும் வலுப்படுத்தப்படும். பொது இடங்களில் 5ஜி தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அதிக சக்தி வாய்ந்த கண்காணிப்பு மறைகாணிகள் (கேமரா) நிர்மாணிக்கப்படுவதன் மூலம் சம்பவங்கள் நடப்பதை அப்போதே உடனுக்குடன் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவும் முடியும்.

மலேசியாவில் இயங்கி வரும் செல்கோம், மேக்சிஸ் போன்ற பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5ஜி தொழில் நுட்பத்தில் பங்கு கொள்ள தயாராகி வருகின்றன.