சென்னை: தஞ்சை பெரிய கோயிலில் வருகிற பிப்ரவரி 5-ஆம் தேதி குட முழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், அதனை தமிழில் நடத்த வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செந்தில் நாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தஞ்சை பெரிய கோயில் என்பது தமிழர்களின் அடையாளம் என்றும் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் சைவ ஆகம விதிப்படி கட்டப்பட்டதால், இங்கு தமிழில் பூசைகளும் அர்ச்சனைகளும் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம். துரைசாமி, டி. இரவிந்திரன் ஆகியோர், வருகிற ஜனவரி 27-ஆம் தேதிக்குள் பதில் அளிப்பதற்கு தமிழக அரசின் தலைமை செயலர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தஞ்சை பெரிய கோயில் நிர்வாகத்தினர், தஞ்சை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளனர்.