கோலாலம்பூர் – தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களில் ஒருவரான பூமகன் மீதான குற்றச்சாட்டு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இவர் மீதான வெவ்வேறான வழக்குகள், வெவ்வேறான நீதிமன்றங்களில் இருந்ததினால், அனைத்து குற்றச்சாட்டுகளுக்கான விசாரணைகளை ஒரே நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்பட வேண்டும் என்ற வகையில் இவரது வழக்கு அடுத்த மாதம் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
விடுதலை புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தாகவும், விடுதலை புலி சம்பந்தமான பல்வேறு பதாகைகள் மற்றும் புத்தகங்கள் வைத்திருந்த காரணத்திற்காகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
இன்று நடைபெற்ற இந்த வழக்கு முதல் முறையாக நீதிமன்றத்திற்கு வந்திருப்பதால், இவரது அடுத்த விசாரணையின்போது பிணை (ஜாமீன்) கேட்டு மனு செய்யப்படவுள்ளது. இவரது வழக்கினை ஏற்று நடத்துவதற்கு மஇகாவின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் இராஜசேகரன் தலைமையில் மஇகாவின் வழக்கறிஞர்கள் இலவசமாக வாதாடுகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவரது வழக்கை விசாரிப்பதற்கு நீதி மன்றம் ஒரு மாத காலம் அவகாசம் எடுத்துக் கொண்டதை எதிர்த்து, இராஜகேரன் நீதிமன்றத்தில் இன்றைய விசாரணையின்போது வாதாடினார். வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற அவரது வாதங்களை அடுத்து வழக்கு விசாரணைக்கான அடுத்த தேதி பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி என நீதிமன்றம் நிர்ணயித்தது.
இன்று நடைபெற்ற இந்த வழக்கின் நீதிபதியாக அகம்மது ஷாஹிர் பின் முகம்மது சாலே செயல்பட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டி பூமுகனுடன் சேர்த்து இதுவரையில் 12 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மேலும் சிலருக்கும் மஇகாவால் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் குழு களம் இறங்கி வாதாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.