பெய்ஜிங்: உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரான ஜேக் மா தனது அறக்கட்டளையின் மூலம் 100 மில்லியன் யுவான் (58.92 மில்லியன் ரிங்கிட்) நன்கொடையை, கொரொனாவைரஸுக்கு எதிராக புதிய தடுப்பு மருந்தை உருவாக்க அளித்துள்ளார்.
இது வரையிலும், இந்நோயினால் 170 பேர் மரணமுற்றுள்ளனர்.
ஜேக் மா அறக்கட்டளையின் சமூக ஊடகப் பக்கம் கூறுகையில், 40 மில்லியன் யுவான் (23.57 மில்லியன் ரிங்கிட்) இரண்டு சீன அரசாங்க ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று கூறியுள்ளது.
“பணத்தின் மீத இருப்புகள் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை ஆதரிக்க பயன்படுத்தப்படும்” என்று அது இன்று வியாழக்கிழமை தெரிவித்ததாக, எஸ்பிஎஸ் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வுஹான் மற்றும் ஹூபே பிராந்தியத்திற்கும் மருத்துவப் பொருட்களை வாங்க ஜேக் மாவின் அலிபாபா நிறுவனம் கடந்த சனிக்கிழமையன்று 1 பில்லியன் யுவான் திரட்ட அறிவித்திருந்தது.
கூடுதலாக, தடுப்பு மருந்துகள் ஆய்வுகள் அல்லது சோதனைகள் நடத்துவதற்கு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு கணினி நிபுணத்துவத்தையும் அலிபாபா வழங்குகிறது.
ஆய்வகத்தில் கொரொனாவைரஸ்களை வெற்றிகரமாக உருவாக்கிய ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் வெற்றியைத் தொடர்ந்து, தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதற்காக இந்த முதலீடு செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆய்வகங்கள் உட்பட ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றும் பிற ஆய்வகங்களுடன் இது பகிரப்படும்.