Home One Line P1 விடுதலைப் புலிகள் விவகாரம் : சாமிநாதனின் அடுத்த கட்டப் போராட்டம் என்ன?

விடுதலைப் புலிகள் விவகாரம் : சாமிநாதனின் அடுத்த கட்டப் போராட்டம் என்ன?

957
0
SHARE
Ad
மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன்

கோலாலம்பூர் – விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நூறு நாட்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் ஜி.சாமிநாதனுக்கு பிணை (ஜாமீன்) வழங்கப்பட கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று மறுத்ததைத் தொடர்ந்து அவரது அடுத்த கட்ட சட்டப் போராட்டம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேற்று வழங்கப்பட்டது உயர் நீதிமன்றத் தீர்ப்பு என்பதால் சாமிநாதன் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்.

சாமிநாதனின் வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் இது குறித்து நேற்று கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதா அல்லது மீண்டும் உயர் நீதிமன்றத்திலேயே பிணை கோரும் புதிய வழக்கொன்றை சமர்ப்பிப்பதா என்பதை முடிவு செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு சில காரணங்களால் பிணை மறுக்கப்பட்டால், அதன்பின்னர் புதிய தகவல்களோ, புதிய ஆதாரங்களோ கிடைத்தால், அவர் மீண்டும் பிணை மனு கோரி அதே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்.

ஆனால், உயர்நீதிமன்ற நீதிபதி சரியான தீர்ப்பு வழங்கவில்லை எனக் கருதப்பட்டால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடலாம்.

சாமிநாதனின் பிணை மனுவை நிராகரிக்க நீதிபதி அகமட் ஷாரிர் வழங்கியிருக்கும் காரணங்கள் நியாயமானதாகவும், சட்டப்படியும் இருப்பதாகவே கருதப்படுகிறது.

எனவே, முதல் கட்டமாக சாமிநாதனின் வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் மேல்முறையீட்டு நீதிமன்றம் செல்வாரா அல்லது புதிய பிணை மனு ஒன்றை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திலேயே மீண்டும் சமர்ப்பிப்பாரா என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.

மொகிதின் யாசின் பயங்கரவாதப் பட்டியலை மறு ஆய்வு செய்வாரா?

நேற்றைய வழக்கின் தீர்ப்பின் மூலம் சாமிநாதனுக்கு மற்றொரு புதிய வழியையும் நீதிபதியே தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அதாவது, விடுதலைப் புலிகள் இயக்கம், இன்னும் சட்டத்தின் கீழ் பயங்கரவாத இயக்கமாக பட்டியலிடப்பட்டுள்ளதால் சாமிநாதனுக்கு பிணை வழங்க முடியாது என நீதிபதி அகமட் ஷாரிர் தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.

2001-ஆம் ஆண்டு கள்ளப் பணப் பரிமாற்றம், பயங்கரவாதத்துக்கான நிதிதிரட்டுதல், சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னும் பயங்கரவாத இயக்கமாக பட்டியலிடப்பட்டிருப்பதை நீதிபதி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கான ஒரே வழி உள்துறை அமைச்சர் அந்தப் பட்டியலை மறு ஆய்வு செய்வதுதான் எனக் குறிப்பிட்ட நீதிபதி, சட்டப்படி உள்துறை அமைச்சர் 6 மாதங்களுக்கு ஒருமுறை அந்தப் பட்டியலை மறு ஆய்வு செய்ய முடியும் என்பதையும் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்.

எனவே, ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, இலங்கை ஆகிய வட்டாரங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை அகற்றப்பட்டிருக்கிறது என்பதால் அந்த அடிப்படையில் உள்துறை அமைச்சர் என்ற முறையில் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பயங்கரவாதப் பட்டியலை மறு ஆய்வு செய்து, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான தடையை நீக்கி விட்டாலும், சாமிநாதனும் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் இதர 11 பேர்களும் இயல்பாகவே விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள்.

ஆனால், மொகிதின் யாசின் அத்தகைய முடிவை எடுப்பாரா, அதற்கு காவல் துறை ஒப்புக் கொள்ளுமா, அமைச்சரவையும் உடன்படுமா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

சொஸ்மா இரத்து செய்யப்படுமா?

சாமிநாதன், குணசேகரன் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களையும் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மற்றவர்களையும் விடுதலை செய்ய நம்பிக்கைக் கூட்டணிக்கு இருக்கும் மற்றொரு வழி சொஸ்மா சட்டத்தை இரத்து செய்வதுதான்.

சொஸ்மா இரத்து செய்யப்பட வேண்டும் என்ற அறைகூவல்கள் வலுத்து வரும் வேளையில், அந்தச் சட்டத்தில் சில மாற்றங்களை செய்து நம்பிக்கைக் கூட்டணி தொடர்ந்து அமுல்படுத்தப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

அவ்வாறு சொஸ்மா சட்டம் இரத்து செய்யப்பட்டாலும் அத்தகைய முடிவு சாமிநாதனின் விடுதலைக்கு வழிவகுக்கும்.

ஆனால், இது நீண்ட காலம் எடுக்கக் கூடிய நடைமுறையாகும். சொஸ்மாவை இரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டாலும், அதற்கான மசோதா வரையப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மாமன்னரின் ஒப்புதல் பெற்று சட்டமாக அமுல்படுத்தப்பட்ட பின்னரே சாமிநாதன் உள்ளிட்ட 12 பேர்களின் விடுதலை சாத்தியமாகும்.

எனவே இந்த நடைமுறையின் மூலம் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலையாவது உடனடியாக நடக்கக் கூடிய ஒன்றல்ல.

இந்நிலையில், சாமிநாதன் போன்றவர்களின் போராட்டம் எந்தக் கோணத்தில் செல்லும்? எந்தப் பாதையில் சட்டப் போராட்டம் தொடரும்?

அநேகமாக நேற்றைய கோலாலம்பூர் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சாமிநாதனின் வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங், மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்வாரா அல்லது மீண்டும் உயர்நீதிமன்றத்திலேயே புதிய பிணை மனுவைச் சமர்ப்பிப்பாரா என்ற முடிவைப் பொறுத்துதான் சாமிநாதனின் அடுத்த கட்டப் போராட்டம் எந்த இலக்கை நோக்கிச் செல்லும் என்பதைக் கணிக்க முடியும்!

– இரா.முத்தரசன்