ஜெனீவா: கொரொனாவைரஸ் தொடர்பான மரண எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய அவசரநிலையை அறிவித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (மலேசிய நேரப்படி) ஜெனீவாவில் அதன் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தின் பின்னர் இந்த விவகாரத்தை அது அறிவித்தது.
கொரொனாவைரஸ் தொடர்பான பதிவுகள் வாரத்திற்கு 10 மடங்குக்கு மேல் உயர்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய அவசரநிலைகளை ஐக்கிய நாடுகளின் சுகாதார நிறுவனம் (ஐநா) மற்ற நாடுகளுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் அசாதாரண நிகழ்வுகளாக வரையறுக்கிறது.
கடந்த டிசம்பர் பிற்பகுதியில் இந்த புதிய நோய்க்கிருமி குறித்து சீனா உலக சுகாதார அமைப்புக்கு தகவல் அளித்தது.
ஜனவரி 30-ஆம் தேதி நிலவரப்படி 171 இறப்புகள் உட்பட 8,243-க்கும் மேற்பட்டோர் இந்த தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சீனா தெரிவித்துள்ளது.
மொத்தம் 22 நாடுகள் கொரொனாவைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், விஞ்ஞானிகள் தற்போது, இந்நோயின் தன்மை மற்றும் அது எவ்வாறு பரவுகிறது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். மனிதனுக்கு மனிதனுக்கு தொற்று ஏற்பட்டதற்கு குறிப்பிடத்தக்க சான்றுகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, கனடா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளில் இந்நோயின் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து உலகளாவிய கவலையை எழுப்பியுள்ளது.
சீனாவிற்கு வெளியே வைரஸ் பரவுவது குறித்து பரவலான கவலை இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஒப்புக் கொண்டார்.
இந்த அறிவிப்புக்கு முக்கிய காரணம் சீனாவில் நடந்ததால் அல்ல, மற்ற நாடுகளிலும் இது பரவி உள்ளதால்தான் என்று அவர் கூறினார்.
மோசமான சுகாதார அமைப்புகளைக் கொண்ட மற்றும் அதைக் கையாளத் தயாராக இல்லாத நாடுகளில் இந்த வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுதான் உலக சுகாதார அமைப்பின் கவலை என்று அவர் குறிப்பிட்டார்.