கோலாலம்பூர்: தேசிய ஊழல் தடுப்புத் திட்டம் (என்ஏசிபி) 2019-2023 தொடங்கப்பட்டு ஒரு வருடம் கழித்து, மலேசியாவுடன் தொடர்புப்படுத்தப்பட்ட அதிகார அத்துமீறல் உருவம் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டு நாட்டின் நேர்மைத் தன்மையை மீட்டெடுத்துள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
“இனி, மலேசியாவின் பிரதமர் தனிப்பட்ட இலாபத்திற்காக பொது நிதி திருடியதாக குற்றம் சாட்டப்படமாட்டார்,” என்று அவர் கூறினார்.
மலேசிய அனைத்துலக வெளிப்படைத்தன்மை (டிஐ–எம்) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, 2019-ஆம் ஆண்டுக்கான ஊழல் குறியீட்டில் (சிபிஐ) மலேசியா 61-வது இடத்திலிருந்து 51-வது இடத்திற்கு உயர்ந்ததை அவர் நேற்று என்ஏசிபி 2019-2023 அறிமுக விழாவில் தெரிவித்தார்.
கடந்த மே 2018 முதல் நாட்டை ஆளும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் செயல்திறனை மதிப்பிடும் வகையில் குறிப்பிட்ட டாக்டர் மகாதீர், ஆளுமை, நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மிகவும் நுட்பமாகக் கையாளப்பட்டதாகத் தெரிவித்தார்.
“ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த உத்திகளையும் இது வகுக்கிறது.”என்று அவர் கூறினார்.
2019-2023-க்கு இடையில் இந்த திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட 115 வரைவுகளில், 25 முயற்சிகள் இதுவரை முடிக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறினார்.
“இது என்ஏசிபி செயல்படுத்தப்பட்ட முதல் ஆண்டு, நாம் இப்போது அதன் சாதனைகளைப் பார்க்கிறோம்.” என்று அவர் தெரிவித்தார்.