Home One Line P1 தேசிய பொங்கல் விழா 2020 – வேதமூர்த்தி தொடக்கி வைக்கிறார்

தேசிய பொங்கல் விழா 2020 – வேதமூர்த்தி தொடக்கி வைக்கிறார்

843
0
SHARE
Ad

புத்ராஜெயா – தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை (பிரதமர் துறை), சுற்றுலாத் துறை ஆகிய அமைச்சுகளின் இணை ஏற்பாட்டிலும் தேசிய இளைஞர் மன்ற ஒருங்கிணைப்பிலும் நடைபெற உள்ள இந்தத் தேசியப் பொங்கல் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 2-ஆம் நாள் பத்துமலை, தேசிய சீன தொடக்கப்பள்ளியில் (கியோ பின்) காலை 8:00 முதல் நண்பகல் வரை நடைபெற உள்ளது.

தேசிய பண்பாட்டுப் பொங்கல் விழாவை பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பத்துமலையில் தொடக்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா மற்றும் கலை-பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ முகமட் கெத்தாப்பியும் கலந்து கொள்ள உள்ளார்.

#TamilSchoolmychoice

தமிழ் நாட்காட்டியின்படி அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் விழா, இந்தப் பொங்கல் பண்டிகையாகும். மலேசிய மக்கள் காலமெல்லாம் போற்றிவரும் சமய நல்லிணக்கம், சமூக ஒருங்கிணைப்பு, மலேசியர்களின் சகிப்புத்தன்மை ஆகிய கூறுகளுக்கு கட்டியம் கூறும் இந்தப் பொங்கல் திருநாள் விழாவில் இடம்பெறவுள்ள அனைத்து இனப் பெண்களுக்கான பொங்கல் சமைக்கும் போட்டி, கோலப் போட்டி, பல்லின இளைஞர்களுக்கான மாலை கட்டும் போட்டி, தோரணம் தொடுக்கும் போட்டி, தங் லோங் விளக்கு தயாரிக்கும் போட்டி, பட்டம் தயாரிக்கும் போட்டி, உறியடிக்கும் போட்டி, 12 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள், 12 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என இரு பிரிவாக வண்ணம் தீட்டும் போட்டிகள் ஆகியவை நடைபெறவிருக்கின்றன.

மலேசிய இளைஞர் மன்றத்தில் உறுப்பியம் பெற்றுள்ள இந்திய இளைஞர் அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்து இளைஞர் இயக்கம், தமிழ் இளைஞர் மணிமன்றம், இந்திய இளைஞர் மன்றம், சீக்கிய இளைஞர் இயக்கம், கெப்பிமா என்னும் இந்திய முஸ்லிம் இளைஞர் இயக்கம் உட்பட ஏராளமான அரசுசாரா அமைப்பினரும் பங்குபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க பொதுமக்களும் அழைக்கப்படுகின்றனர்.

இந்த ‘2020-தேசிய பண்பாட்டு பொங்கல் கொண்டாட்டம்’ தொடர்பில் மேல் விவரத்திற்கு:

அருண்- 012-650 4254 & 013-6770 529