Home One Line P1 மரத்தாண்டவர் ஆலய சங்கப் பதிவிலாகா பிரச்சனைக்கு விக்னேஸ்வரன் தீர்வு கண்டார்

மரத்தாண்டவர் ஆலய சங்கப் பதிவிலாகா பிரச்சனைக்கு விக்னேஸ்வரன் தீர்வு கண்டார்

615
0
SHARE
Ad
மரத்தாண்டவர் ஆலயப் பொருளாளர் தமிழ்ச் செல்வன் (இடதுபுறம்) விக்னேஸ்வரனுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கிறார்.

ரவூப் – மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய நிர்வாகம், அந்த ஆலயத்தின் தொடர்பில் சங்கப் பதிவிலாகாவில் எதிர்நோக்கியிருந்த சிக்கலை மஇகா தேசியத் தலைவரும், நாடாளுமன்ற மேலவையின் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தீர்த்து வைப்பதில் உதவிக் கரம் நீட்டியிருக்கிறார்.

சங்கப் பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) பதிவு விவகாரச் சிக்கலை களைவதற்கு உதவிக்கரம் நீட்டிய விக்னேஸ்வரனுக்கு, ஆலய நிர்வாகத்தின் சார்பாக அதன் கெளரவப் பொருளாளர் டத்தோ க.தமிழ்ச்செல்வன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இது தொடர்பாக தமிழ்ச் செல்வன் கூறியதாவது :-

#TamilSchoolmychoice

“மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் அங்கத்தினர்களில் ஒரு சிலர், நிர்வாகத்திற்கு எதிராக பகாங் மாநில சங்கங்களின் பதிவகத்திடம் (ஆர்.ஓ.எஸ்.) செய்த புகாரின் அடிப்படையில், கடந்த 15.8.2019இல் ஆலயத்தின் பதிவு ரத்தானது.
சங்கப் பதிவிலாகாவின் அந்த முடிவை புத்ராஜெயாவிலுள்ள சங்கப் பதிவிலாகா  தலைமையகத்திடமும் உள்துறை அமைச்சிடமும் மேல்முறையீடு செய்தோம். நிர்வாகத் தரப்பின் விளக்கத்தையும் நியாயத்தையும் அவ்விரு அரசு இலாகாக்களிலும் விவரிக்கும் முயற்சிக்கு, அமைச்சர்களும் சில வழக்கறிஞர்களும் உதவி புரிந்தனர்.

அம்முயற்சிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், என்னை நேரடியாக அழைத்து உதவி புரிவதாகச் சொன்னார். பின்னர், அவரின் நாடாளுமன்ற அலுவலகத்திற்கு அழைத்து, விவரங்களைக் கேட்டறிந்தார். பதிவு விவகாரம் தொடர்பாக, ஆலய நிர்வாகத்தின் ஆவணங்களைச் சரிபார்த்த அவர், மேல்முறையீடு விவகாரத்தில் உள்ள சட்ட நுணுக்கங்களையும் ஆய்வு செய்தார். உண்மை நிலவரத்தை அறிந்து கொண்ட பின், ஆலயத்தின் பதிவை மீட்டுக் கொடுக்கும் பணியில் அவரே நேரடியாக களத்தில் இறங்கினார்.

அவரின் சட்ட நுணுக்கமான அனுகுமுறையாலும், ஏற்கெனவே அமைச்சர்களும் ஒரு சில நல்லுள்ளங்களும் உள்துறை அமைச்சுக்கு கடிதம் கொடுத்திருந்ததாலும், எங்கள் ஆலயத்தின் பதிவு திரும்பக் கிடைத்தது. எங்களைச் சூழ்ந்திருந்த சிக்கலுக்குத் தீர்வு கொணர்ந்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு, ஆலயத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு பக்கப்பலமாக இருந்து உதவிகள் புரிந்த அமைச்சர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று டத்தோ தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார்.

கடந்த 15.8.2019-இல் மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் பதிவு ரத்துச் செய்யப்பட்டது. ஐந்து மாதங்கள் போராட்டத்திற்குப் பின், 21.1.2020-இல் ஆலயத்தின் பதிவு திரும்பக் கிடைத்தது. ஆலயத் தரப்பினர் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை, சங்கப் பதிவிலாகாவும் உள்துறை அமைச்சும் சில நிபந்தனையுடன் ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இனி, ஆலயத்தின் நிர்வாகம் வழக்கம் போல தனது அன்றாடப் பணிகளை தொடரும் என்றும் தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.