கோலாலம்பூர்: நவம்பரில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபிஇசி) உச்சமாநாட்டிற்குப் பின்னர் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், தம் பதவியினை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்காவிட்டால் அவரது பெயருக்கு அவரே களங்கத்தை ஏற்படுத்திக் கொள்வார் என்று பேராக் மாநில ஜசெக மத்தியக் குழு உறுப்பினர் டத்தோ ஏ.சிவநேசன் கூறினார்.
அதிகாரப் பரிமாற்றம் என்பது டாக்டர் மகாதீரின் வாக்குறுதியாகும் என்றும், அது தனது சொந்த நாட்டின் நலன்களுக்கான நடவடிக்கையாகும் என்றும் அவர் விளக்கினார்.
“டாக்டர் மகாதீர் தம் பதவியினை ஒப்படைக்கவில்லை என்றால், அவர் தனது பெயருக்கு களங்கள் ஏற்படுத்திக் கொள்வார். 94 வயதில், டாக்டர் மகாதீர் தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் அளவிற்கு நடந்து கொள்ளமாட்டார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.”
“அவர் அரசியலில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளாக இல்லை, உலகம் அவரை அறிந்திருக்கிறது,” என்று அவர் அஸ்ட்ரோ அவானியிடம் கூறினார்.
யுஇசி கல்வி முறையை அதிகாரப்பூர்வ தேர்வாக அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்றால் ஜசெக நம்பிக்கைக் கூட்டணியை விட்டு விலகிவிடும் என்று ஜசெக துணை பொதுச் செயலாளர் எங் கோர் மிங் குறிப்பிட்டதற்கு, மலேசிய இஸ்லாமிய மாணவர் சம்மேளனத்தின் (காமிஸ்) தலைவர் சைபுல்லா பைதுரியின் அறிக்கை குறித்து சிவநேசன் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, தாம் கூறியதை அச்செய்தித் தளம் தவறாகப் புரிந்து கொண்டது என்று கோர் மிங் கூறியிருந்தார்.