கோலாலம்பூர்: கொரொனாவைரஸ் தொற்று நோய் தொடர்பாக முதல் மலேசியர் (41 வயது) ஒருவர் தடுத்து வைக்கபட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.
தற்போது, அவருக்கு சுங்கை புலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.
மேலும், சம்பந்தப்பட்டவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் 14 நாட்களுக்கு வீட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கபட்டவரின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் நடந்த சந்திப்புக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு ஜனவரி 23-ஆம் தேதியன்று அவர் மலேசியா திரும்பியதாக நம்பப்படுகிறது.
“ஜனவரி 29, அன்று காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக சிலாங்கூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் பிப்ரவரி 2-ஆம் தேதியன்று சுங்கை புலோ மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டார்,” என்று டாக்டர் சுல்கிப்ளி கூறினார்.