இரத ஊர்வலத்தை முன்னிட்டு மஇகா தலைமையகம், இவ்வாண்டும், இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 6) இரவு 10.00 மணி முதல், சுமார் 10,000 பக்தர் பெருமக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து அன்னதானம் வழங்குவதற்குரிய ஏற்பாட்டினைச் செய்துள்ளது.
மஇகா தலைமையகக் கட்டிடத்தின் முன்புறத்திலுள்ள, ஜாலான் ஈப்போ சாலையில் அமைந்திருக்கும் பெர்க்கிம் கட்டிடத்தின் முன்பு கூடாரங்கள் அமைக்கப்பட்டு பக்தர் பெருமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
கோலாலம்பூர் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் இருந்து புறப்படும் அருள்மிகு முருகப்பெருமானின் இரதம் இரவு 10.00 மணி அளவில் மஇகா தலைமையகக் கட்டிடத்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சுற்றுவட்டாரத்திலுள்ள பக்தர்கள் அனைவரும் வருகை புரிந்து, அருள்மிகு முருகப் பெருமானின் அருள் பெற்றுய்யுமாறும் அசோஜன் கேட்டுக் கொண்டார்.
மஇகா தலைமையகம் இதுபோன்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கடந்த 2010ம் ஆண்டு முதல் வழங்கி வருகின்றது என்றும் அசோஜன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.


நாட்டிலுள்ள மஇகா மாநிலக் காங்கிரஸ்களும் தைப்பூசம் கொண்டாடப்படும் அந்தந்த மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இதுபோன்று தண்ணீர் பந்தல் அமைத்து அன்னதானம் வழங்குகின்றன என்று கூறிய அசோஜன், பேராக், ஈப்போ கல்லுமலை ஆலயம், கெடா, சுங்கைப்பட்டாணி அருள்மிகு சுப்ரமணியம் ஆலயம், பினாங்கு தண்ணீர்மலை ஆலயம் மற்றும் ஜோகூர் போன்ற அனைத்து மாநிலங்களிலும் மஇகா பொறுப்பாளர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து, வருகின்ற பக்தர் பெருமக்களுக்கு சிற்றுண்டிகளும், பானங்களும் வழங்கி உறுதுணையாக இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
அனைவருக்கும் தமது இனிய தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்ட அசோஜன், அதேவேளையில், நமது சமயத் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இவ்விழாவினை இந்து சமய பண்பாட்டு மற்றும் நன்னெறியோடு கொண்டாட அனைத்து இந்துப் பெருமக்களும் தங்களது கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். குறிப்பாக, மற்றவர்கள் நம்மைப்பற்றி எந்தவொரு குறையும் கூறாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், அசோஜன் தமதறிக்கையில் தெரிவித்தார்.