Home One Line P2 கொரொனாவைரஸ் ஒழிப்புக்கு பில்கேட்ஸ் அறவாரியம் 100 மில்லியன் டாலர் வழங்குகிறது

கொரொனாவைரஸ் ஒழிப்புக்கு பில்கேட்ஸ் அறவாரியம் 100 மில்லியன் டாலர் வழங்குகிறது

730
0
SHARE
Ad
பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ்

ஹாங்காங் – உலகின் முதல் நிலை கோடீஸ்வரராக நீண்ட காலமாகத் திகழ்ந்த பில் கேட்ஸ் தற்போது உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராகக் கருதப்படுகிறார். அதேவேளையில் அறப்பணிகளுக்காக கோடிக்கணக்கான டாலர்களை அவர் வாரி வழங்கியிருக்கிறார்.

மைக்ரோசோப்ட் நிறுவனத்தின் தோற்றுநரும் பெரும்பான்மை பங்குகளின் உரிமையாளருமான பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டா கேட்சுடன் இணைந்து “பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்” என்ற அறவாரியத்தை நடத்தி வருகிறார்.

இந்த அறவாரியத்தின் மூலம் உலகின் பல நாடுகளிலும் மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதற்கும், சுகாதாரப் பணிகள் மேம்படுத்தப் படுவதற்கும் ஏராளமான நிதியை பில் கேட்ஸ் தம்பதியர் வழங்கி வந்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

அந்த வகையில் உலகையே தற்போது மிரட்டி வரும் கொரொனாவைரஸ் பாதிப்புக்காக, அந்த வைரசை ஒழிப்பதற்கான பணிகளுக்கு 100 மில்லியன் டாலர் வழங்குவதாக பில்கேட்ஸ் அறவாரியம் அறிவித்துள்ளது.

கொரொனாவைரசுக்கான எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பது, அந்த வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவது, அந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மற்றும் அவர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவது போன்ற பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.

ஏற்கனவே, 10 மில்லியன் டாலரை வழங்குவதாக உறுதியளித்த பில்கேட்ஸ் அறவாரியம், தற்போது அதை உயர்த்தி 100 மில்லியன் டாலராக அறிவித்துள்ளது.

முதல் கட்டமாக கொரொனாவைரஸ் ஒழிப்புக்காகப் பாடுபடும் குழுக்களுக்கும் அமைப்புகளுக்கும் 20 மில்லியன் டாலர் வழங்கப்போவதாகவும் பில்கேட்ஸ் அறவாரியம் அறிவித்திருக்கிறது.