Home One Line P1 இங்கேயே பிறந்து வளர்ந்தும் பல்லாண்டுகளுக்குக் காத்திருக்கும் மலேசியர்கள் – நேற்று வந்த கொசோவா நாட்டவருக்கு 5...

இங்கேயே பிறந்து வளர்ந்தும் பல்லாண்டுகளுக்குக் காத்திருக்கும் மலேசியர்கள் – நேற்று வந்த கொசோவா நாட்டவருக்கு 5 ஆண்டுகளில் குடியுரிமை

1141
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – மலேசியாவில் குடியுரிமை பெறுவது என்பது அவ்வளவு சுலபமானதல்ல! ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் இந்தியர்கள் பலரைக் கேட்டால் கதை கதையாகக் கூறுவார்கள். எத்தனை ஆண்டுகள் காத்திருக்கிறோம், எத்தனை தடவை அரசாங்க அலுவலகங்களுக்கும், ஆவணங்களைப் பெறுவதற்கும் அலைந்தோம் – எத்தகையப் பிரச்சனைகளைச் சந்தித்தோம் என்பதை கண்ணீர் மல்க ஏக்கத்துடனும் ஏமாற்றத்துடனும் கூறுவார்கள்.

ஆனால், லிரிடோன் கிராஸ்னிகி (படம்) என்ற கொசோவா நாட்டைச் சேர்ந்த காற்பந்து விளையாட்டாளரோ, சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் கெடா மாநிலத்திற்காக மலேசிய லீக் காற்பந்து போட்டிகளுக்காக விளையாடினார். ஆனால் அதற்குள்ளாக கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி அவருக்கு மலேசியக் குடியுரிமையே வழங்கப்பட்டு விட்டது.

இது குறித்து மலேசியா முழுவதிலும் கடுமையானக் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு இது குறித்து தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

குறிப்பாக சரவாக் மாநிலத்திலும் பல தரப்புகளில் இருந்து கண்டனக் கணைகள் எழுந்திருக்கின்றன என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேசியப் பதிவிலாகா இதுகுறித்து விரிவான விளக்க அறிக்கை வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை பெறுவதற்கு முன்பாக, குறைந்தது 10 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக ஒரு நபர் மலேசியாவில் தங்கியிருந்தால் மட்டுமே அவர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவராவார் என மலேசிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 19-வது விதி தெளிவாகக் குறிப்பிடுகிறது.

அதுமட்டுமல்ல, விண்ணப்பதாரர் மலாய் மொழியில் போதிய தேர்ச்சி பெற்றிருப்பதை நிரூபிக்க வேண்டும். மலாய் மொழிக்கான வாரியம் இதனை உறுதிப்படுத்தும்.

இந்த நடைமுறைகளையெல்லாம் பின்பற்றித்தான் லிரிடோன் கிராஸ்னிகிக்கு குடியுரிமை வழங்கப்பட்டதா என்பதை தேசியப் பதிவிலாகா உறுதிப்படுத்த வேண்டுமென சரவாக்கைச் சேர்ந்த வழக்கறிஞர் சைமன் சியா அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்திருக்கிறார்.

நாட்டிலுள்ள குடியுரிமை அல்லாத மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சிறப்பு நடவடிக்கைக் குழு அமைக்கப்படும் என்றும் காத்திருப்போரின் விண்ணப்பங்களைத் துரிதப்படுத்த அடிப்படையான, கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படவிருக்கும் அம்சங்கள் என்ன என்பது தெளிவுபடுத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கடந்த ஆண்டில் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரையில் அத்தகைய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.