Home One Line P1 “400 பேர்களுக்கு அடையாள அட்டை, ஆனால் 2 ஆயிரம் பேர்களின் வேதனை இன்னும் தீரவில்லை” –...

“400 பேர்களுக்கு அடையாள அட்டை, ஆனால் 2 ஆயிரம் பேர்களின் வேதனை இன்னும் தீரவில்லை” – கணபதிராவ்

575
0
SHARE
Ad

ஷா ஆலாம் : மைசெல் திட்டத்தின் மூலம் சிலாங்கூர் மாநிலத்தில் போதுமான ஆவணங்கள் இல்லாமல் அவதிப்படும் பொதுமக்களுக்கு அடையாள ஆவணங்களைப் பெற்றுத்தரும் முயற்சியில் தனது குழுவினருடன் ஈடுபட்டிருக்கிறார் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.கணபதிராவ்.

இதுவரையில் இந்தத் திட்டத்திற்காக 2500 பேர் பதிந்து கொண்டுள்ளனர். அவர்களில் சுமார் 400 பேர்களின் பிரச்சனைகளை வெற்றிகரமாகத் தீர்த்து வைத்து அவர்களுக்கு அடையாள ஆவணங்களைப் பெற்றுத் தந்திருக்கிறது கணபதி ராவின் குழு.

இது குறித்து நேற்று வியாழக்கிழமை (மார்ச் 11) தனது அலுவலகத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது மேலும் பல விவரங்களை கணபதிராவ் பகிர்ந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

“400 பேர்களில் பிரச்சனையைத் தீர்த்து வைத்து அவர்களுக்கு அடையாள ஆவணம் கிடைத்திருப்பதை நினைத்துப் பெருமைப்படுவதா அல்லது இன்னும் இத்தகைய பிரச்சனைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் எஞ்சிய 2000 பேர்களை நினைத்து வருத்தப்படுவதா?” எனவும் கணபதி ராவ் கேள்வி எழுப்பினார்.

அடையாள ஆவண விவகாரங்களில் மைசெல் மூலமாக பதிவு செய்து கொண்ட 2500 பேர்களில் இதுவரை வெற்றிகரமாக 400 பேர்களுக்கு அடையாள அட்டை,பிறப்பு பத்திரம்,குடியுரிமை,குடிநுழைவு விவகாரம் மற்றும் குழந்தை தத்தேடுத்தல் மூலமாக மூன்றாண்டுகளில் சுமுகமான முறையில் தீர்வு கண்டுள்ளோம். ஆனால் வெற்றி கண்ட 400 பேரை கண்டு மகிழ்ச்சி கொள்வதா அல்லது 2000 க்கும் மேற்பட்டவர்களின் வலியைக் குறைக்க முடியாமல் இருப்பதை நினைத்து கலங்குவதா?” என்றும் சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் செய்தியாளர்களிடம் உருக்கமாக கூறினார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளில் இருவருக்கு பல போராட்டங்களுக்கு பிறகு நீல நிற அடையாள அட்டை கிடைத்து விட்டாலும் இரண்டாவதாக பிறந்த பிள்ளைக்கு இன்னும் அடையாள அட்டை கிடைக்காமல் உள் துறை அமைச்சு மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதையும் அவர் சுட்டி காட்டினார்.
இதனால் அப்பெண் பல இன்னல்களை அனுபவித்து வருவதுடன் வேலை மற்றும் குடும்பம் சார்ந்த விவகாரங்களில் நிம்மதி இன்றி காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேப்போல் 36 ஆண்டுகள் அடையாள அட்டை இன்றி போராடி வந்த காப்பாரை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த வாரம் புத்ரா ஜெயா தேசிய பதிவு இலாகா பச்சை நிற தற்காலிக அடையாள அட்டையை வழங்கியுள்ளது. தன் கூட பிறந்த அனைவருக்கும் நீல நிற அடையாள அட்டை இருப்பினும் தனக்கு மட்டும் அடையாள அட்டை கிடைப்பதில் பல போராட்டங்களை அப்பெண் எதிர் நோக்கியும் வந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

அடையாள அட்டை கிடைத்தவுடனே திருமணம் என்று கூறி வந்த அப்பெண் வந்த வரன்களை கூட வேண்டாம் என்று மறுத்துள்ளார். இறுதியாக தேசிய பதிவு இலாகா பச்சை நிற தற்காலிக அடையாள அட்டை தர சம்மதம் தெரிவித்ததை அடுத்து அவரும் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்துள்ளார் என்று கணபதி ராவ் கூறினார்.

தன்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மைசெல் திட்டம் மூலமாக உதவியை நாடிய அப்பெண்ணுக்கு மூன்றாண்டுகளாக போராடி கடந்த வாரம் பச்சை நிற அட்டையாள அட்டை பெற்று தரப்பட்டது.

இருப்பினும் அவரால் வங்கி கணக்கைத் திறக்க முடியவில்லை. தேசிய பதிவு இலாகா முடியும் என்று கூறிய போதும் வங்கி இவரின் கோரிக்கையை நிராகரித்து வருகின்றது.

ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 12 ஆண்டுகளாக வேலை செய்து வரும் இவருக்கு இ.பி.எப் கணக்கு மட்டும் இருக்கின்றது.பச்சை நிற அடையாள அட்டை கிடைத்தவுடன் தன் 12 ஆண்டுகால இ.பி.எப் பணத்தை தனக்கு கிடைத்த அடையாள அட்டையை பயன் படுத்தி பரிசோதனை செய்த போது பணம் அனைத்தும் சரியான இருந்ததையும் அப்பெண் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
இ.பி.எப் கணக்கை சரி பார்க்க கூடிய வசதிகள் கொண்ட இந்த அடையாள அட்டையைக் கொண்டு வங்கிக் கணக்கைத் திறக்க முடியாது என்று கூறும் அதிகாரம் வங்கிக்கு யார் கொடுத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தேசிய பதிவு இலாகா முடியும் என்று சொல்லியும் வங்கி முடியாது என்று சொல்வதின் மர்மம் என்னவென்றும் அவர் வினவினார்.

“நாடற்றவராக வாழ்வது மிகக் கொடுமை.இது தொடர்பாக என்னை வந்து சந்திக்கும் மக்களுக்கு ஆறுதல் கூட கூற முடியாமல் தான் தவிப்பது எனக்கு மட்டுமே தெரியும்” என்றும் கணபதி ராவ் கனத்த இதயத்துடன் தெரிவித்தார்.

“அடையாள ஆவண விவகாரங்களில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் கிடையாது. மைசெல் என்பது ஒரு சிறு அமைப்பு. அதன் மூலமாக ரகுபதி ராமன் மற்றும் சாந்தா வேணுகோபால் என்ற இரு அதிகாரிகளை நியமித்து குறைந்த சம்பளத்தில் இவ்விவகாரங்களை முடிந்த வரை தீர்வு கண்டு வருகின்றேன்” என்றும் அவர் மேலும் கூறினார்.

“அடையாள ஆவண விவகாரங்களில் மத்திய அரசு வேகமாகவும் விவேகமாகவும் செயல்பட வேண்டும். இவர்களின் வலி வார்த்தைகளாலோ அல்லது எழுத்துக்களாலோ விளக்கி கூற முடியாது. இவர்களுக்கும் எதிர்காலம் உண்டு. கனவுகள் உண்டு, ஆசைகள் உண்டு என்பதை மத்திய அரசு புரிந்துக்கொள்ள வேண்டும். இந்நாட்டில் பிறந்தது இவர்கள் குற்றம் அல்ல! யார் தவறு என்று சுட்டிகாட்டி கொண்டு இருப்பதற்கு பதில் அதற்கான தீர்வை நோக்கி நகரவேண்டும்” என்று மத்திய அரசை தாம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.