சென்னை: பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை தமிழகத்தின் 2020 – 2021 ஆண்டுகான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
உணவு மானியத்திற்கு 6,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டை அரசு வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, அரசு அறிவிக்கும் இந்த நிதிநிலை அறிக்கையின்போது தமிழக அரசின் மொத்த வருவாய் 2,19,375 கோடி ரூபாய் எனவும், செலவு, 2,41,601 கோடி ரூபாய் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இதனால், அரசுக்கு 22,226 கோடி ரூபாய் பற்றாக்குறை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய விவரங்கள் கீழ்வருமாறு:
கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்வி வசதிக்காக 302.98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
பள்ளிகளில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு 966 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
அம்மா உணவகம் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்திற்கு 959.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு 1,863 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
தமிழக ஊரக வளர்ச்சித்துறைக்கு 23,161 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதனிடையே, முதல் முறையாக தொல்லியல் துறைக்கு அதிகபடியான ஒதுக்கீட்டை தமிழக அரசு இம்முறை செய்துள்ளது குறித்து வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு மொத்தமாக 74.08 கோடி ரூபாயும், தொல்லியல் துறைக்கு 31.93 கோடி ரூபாயும் அரசு ஒதுக்கியுள்ளது.
பேரிடர் மேலாண்மைக்கு 1,360.11 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிக்கு 405.68 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
சிறைச்சாலைகள் துறை, நீதி நிர்வாகம் மற்றும் மீன்வளத் துறைக்கு முறையே 392.74, 1,403.17, மற்றும் 1,229.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது.