கோலாலம்பூர்: கடந்த 2017-ஆம் ஆண்டு முன்னாள் அரசாங்க தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேல் ஓட்டுனர் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு வழக்கை தீர்க்க முடியும் என்று காவல் துறையினர் நம்புகின்றனர்.
கடந்த ஜனவரி 22- ஆம் தேதி கிளந்தான் மற்றும் சிலாங்கூரைச் சுற்றியுள்ள நடவடிக்கைகளில் ‘ஏஒய்டி 99’ குழுத் தலைவர் உட்பட அக்குண்டர் கும்பலின் 12 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களில் இருவர் அடங்குவதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசிர் முகமட் தெரிவித்தார்.
“சூதாட்ட எதிர்ப்பு, குற்றம் மற்றும் பகிரப்பட்ட சேவைகள் பிரிவு (டி 7) மேற்கொண்ட பாரிய நடவடிக்கையில், சம்பந்தப்பட்ட இரு சந்தேக நபர்களின் அடையாளங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் அப்துல் கனி சம்பந்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
“குழுவில் 20 உறுப்பினர்களைக் கண்டுபிடிப்பதைத் தவிர, இந்த வழக்கில் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை காவல் துறையினர் இன்னும் தேடி வருகின்றனர். அவர்கள் கிழக்கு கடற்கரையைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது, ”என்று அவர் இன்று திங்கட்கிழமை புக்கிட் அமானில் நடந்த சிறப்பு ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் விளைவாக, ஒரு டொயோட்டா கேம்ரி, பல கைத்துப்பாக்கிகள், ஒரு நீண்ட வாள் மற்றும் 4,000 ரிங்கிட் ரொக்கம் ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றினர்.