சென்னை,ஜன.23 – காவிரி நீர் கிடைக்காமல் சம்பா சாகுபடியில் தமிழக விவசாயிகள் அடைந்த இழப்பை கர்நாடக அரசுதான் ஈடு செய்ய வேண்டும் என வழக்குத் தொடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பது பலருடைய புருவங்களை உயர்த்தியிருக்கிறது.
“முன்னெப்போதும் இல்லா வழக்கம்’ என்று தோன்றினாலும், பாசனநீர், குடிநீர் இரண்டுக்கும் விலை நிர்ணயிக்க மத்திய அரசு நீர்க் கொள்கை அறிவிக்கும்போது, தமிழகத்துக்கு உரிமையான தண்ணீர் இல்லாததால் ஏற்பட்ட இழப்புக்கு கர்நாடகம்தானே பொறுப்பாக முடியும்?
பற்றாக்குறை காலத்துக்கான தண்ணீர் பகிர்வு அளவுகளை வைத்துப் பார்த்தாலும்கூட, கர்நாடக அணைகளில் தேங்கிய தண்ணீர் அளவை வைத்துக் கணக்கிடும் வேளையில், தமிழகத்துக்குக் குறைந்தது 30 டி.எம்.சி. தண்ணீர் நிலுவை இருக்கிறது. இது தமிழகத்துக்கு உரித்தான தண்ணீர் உரிமைப் பங்கு. இதை கர்நாடகமே பயன்படுத்திக்கொண்டது. இதனால் நாம் அடைந்த நஷ்டத்துக்கு அவர்கள்தானே பொறுப்பு?
கர்நாடக அரசு இதுவரை தமிழக அரசுக்குத் தர வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்கவில்லை. நீதிமன்றத் தலையீடு, காவிரி கண்காணிப்புக் குழுவின் கண்டிப்பு ஆகியவற்றால் வேறுவழியில்லாமல் ஏதோ கொஞ்சம் தண்ணீர் வீட்டதே தவிர, தமிழகத்துக்கு “”தண்ணி காட்டும்” போக்கை நிறுத்தவே இல்லை.
பருவமழை பொய்த்திருந்தால், அதற்கு வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஆனால் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்தும்கூட, சுயநலப் போக்குடன் அவர்களே அதைப் பயன்படுத்தினார்களே தவிர, தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடவில்லை. உள்ளதைப் பகிர்ந்து விவசாயம் செய்வோம் என்ற மனநிலையைப் பெற மறுத்தது கர்நாடக அரசு. காவிரி நீர் கொடுக்காமல் “”ஏற்படுத்தப்பட்ட” இந்த இழப்புக்கு, இதற்குக் காரணமான கர்நாடக அரசுதானே பொறுப்பேற்க வேண்டும்?
எங்கள் உரிமைப்பங்கு நீரைக் கொடு. அல்லது அதற்கு உரிய விலையைக் கொடு! என்று கேட்பது இதுதான் முதல்முறை என்பதால், கேட்பது முறையல்ல என்றாகிவிடுமா என்ன?