கோலாலம்பூர்: நடந்து முடிந்த ஆசிய அணி விளையாட்டுப் போட்டியில், தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் பூப்பந்து அணிகளின் சாதனைகள் ‘மோசமான அனுபவத்தின்’ விளைவாகவே ஏற்பட்டது என்று மலேசிய பூப்பந்து சங்கத்தின் (பிஏஎம்) தலைவர் டத்தோஸ்ரீ முகமட் நோர்சா சாகாரியா தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பிஏஅம் பல தரப்பினரின் விமர்சனங்களை சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது என்று அவர் விளக்கினார்.
சீ விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம் தேசிய பூப்பந்தின் எழுச்சியைக் காணமுடிந்தது . இது 44 ஆண்டுகளில் நாட்டின் சிறந்த வெற்றியாகும்.
அவரைப் பொறுத்தவரை, லீ ஸி ஜியா மற்றும் ஆரோன் சியா-சோ வூய் யிக் போன்ற வீரர்களுக்கு அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு பலனளித்துள்ளது என்றும், கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த 2020 ஆசிய அணி விளையாட்டுப் போட்டியில் நாட்டின் ஆண்கள் அணி இரண்டாம் நிலை வெற்றியாளராக திகழ உதவியது என்றும் கூறினார்.
“நாங்கள் இளம் வீரர்களை மேடையில் நிறுத்தும் போது பல்வேறு விமர்சங்களை ஏற்க வேண்டியுள்ளது.”
“இன்று, அவர்கள் மூன்று தங்கப் பதக்கங்களுடன் சீ விளையாட்டில் வென்றுள்ளனர். இப்போது மணிலாவிலும் வென்றுள்ளனர்” என்று அவர் நேற்று செவ்வாயன்று கூறினார்.
இந்தோனிசியாவிடம் 1-3 என்ற புள்ளி எண்ணிகையில் தோல்வியடைந்த பின்னர், தேசிய ஆண்கள் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் பெண்கள் அணி ஜப்பானிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைவதற்கு முன்பு அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த முடிவானது, மலேசிய அணி, மே மாதம் நடைபெற இருக்கும் தாமஸ் கோப்பை மற்றும் ஊபர் கோப்பை ஆகியவற்றில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது.