கோலாலம்பூர்: மலேசியாவுக்கான இந்திய தூதரகம் தற்போதுள்ள இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாறுதலாகி செல்ல இருப்பதாக இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய தூதரகம் ஜாலான் மௌண்ட் கியாராவில் உள்ள மேனாரா 1 மௌண்ட் கியாரா கட்டிடத்தில் 28-வது தளத்தில் இயங்கி வந்தது. தற்போது, ஜாலான் பகாங்கில் உள்ள விஸ்மா எச்ஆர்ஐஎச் லோட்டஸ் கட்டிடத்தில் முதலாவது தளத்தில் செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளது.
தூதரகத்தில் வழங்கப்படும் அனைத்து பொது சேவைகளும், அதாவது கடப்பிதழ் / விசா / ஓசிஐ / தூதரகம் போன்றவை பிப்ரவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மூடப்படும் என்று அது அறிவித்துள்ளது.
பிப்ரவரி 24 முதல் புதிய இடத்திலிருந்து அலுவலகம் செயல்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தியத் தொழிலாளர் தொடர்பான உதவிக்கு, இந்தியத் தொழிலாளர் வள அலுவலகம், அடுத்த அறிவிப்பு வரும் வரையில் மெனாரா 1 மௌண்ட் கியாராவில் 20-வது தளத்தில் தொடர்ந்து செயல்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட சிரமத்திற்கு இந்திய தூதரகம் தங்களது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது.