கோலாலம்பூர் – துன் மகாதீரின் தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசாங்கம் தேசிய முன்னணியின் உதவியோடு அமையவிருப்பதால், புதிய அரசாங்கத்தில் மஇகாவும் இணையும் என்ற ஆரூடங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
மகாதீரின் புதிய அரசாங்கத்தில் பிகேஆர் கட்சியினரும், ஜசெகவினரும் இணைய மாட்டார்கள் என்பதால் தற்போது மனிதவள அமைச்சராக இருக்கும் குலசேகரன் இயல்பாகவே பதவியிலிருந்து விலகும் நிலை ஏற்படும்.
இதற்கிடையில் மற்றொரு இந்திய அமைச்சரான சேவியர் ஜெயகுமார் அஸ்மின் அலி பக்கம் இருக்கிறாரா அல்லது அன்வார் இப்ராகிம் பக்கம் சாய்வாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
எனினும் அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சி அலைவரிசை செய்திகளின்படி, சேவியர் ஜெயகுமார் தற்போது (ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 23 இரவு) அன்வார் இப்ராகிமின் இல்லத்தில் இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சேவியர் ஜெயகுமார், குலசேகரன் இருவருமே அமைச்சர்களாக இருக்கப் போவதில்லை என்றால், அவர்களுக்குப் பதிலாக இந்திய அமைச்சர்களாக இருக்கப் போகிறவர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது.
மஇகாவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான சரவணன் முழு அமைச்சராக புதிய அமைச்சரவையில் நியமனம் பெறலாம் என்ற ஆரூடங்களும் எழுந்துள்ளன. செனட்டராக இருக்கும் டி.மோகன், செனட்டர் ஆனந்தன் போன்றவர்கள் துணையமைச்சர்களாக நியமிக்கப்படலாம்.
இதற்கிடையில் தற்போது பிரதமர் துறை அமைச்சராக இருக்கும் வேதமூர்த்தி தொடர்ந்து அமைச்சராக நீடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மகாதீர் வேதமூர்த்தியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஒருபுறம் எழுந்தாலும், வேதமூர்த்தி புதிய அமைச்சரவையில் அம்னோ, தேசிய முன்னணி, பாஸ் மற்றும் மஇகா தலைவர்களோடு இணைந்து செயலாற்ற வேண்டிய இக்கட்டான நிலைமை ஏற்படும்.
இந்த முரண்பாடுகளின் காரணமாக வேதமூர்த்தி தொடர்ந்து அமைச்சரவையில் மகாதீரோடு இணைந்திருப்பாரா அல்லது பதவியிலிருந்து விலகிக் கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.