புது டில்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு முதல் முறையாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 24) டொனால்டு டிரம்ப் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக டிரம்ப் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த வருடம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ஹவுடிமோடி நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி அமெரிக்கத் தேர்தலில் டிரம்புக்குச் சாதகமாக முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பயணத்துக்காக நேற்று இரவு வாஷிங்டனில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக அவர் அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி எனது நண்பர். இந்திய மக்களைச் சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழியிலும் தனது வருகை குறித்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.