கோலாலம்பூர்: விடுதலைப் புலிகள் தொடர்பான குற்றச்சாட்டில் காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன் உட்பட எட்டு பேரை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் விடுவித்தது.
நீதிபதி முகமட் ஜாமில் ஹுசின், கொலின் லாரன்ஸ் செக்குவாரா மற்றும் நீதித்துறை ஆணையர்கள் அகமட் ஷாஹிர் முகமட் சல்லே மற்றும் டத்தோ அஸ்லாம் சைனுடின் அனைவரையும் விடுவிக்க உத்தரவிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிரான நடவடிக்கைகளை தொடர வேண்டாம் என்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டதை அடுத்து இந்த உத்தரவு விடுக்கப்பட்டது.
35 வயதான சாமிநாதனைத் தவிர, மற்ற ஏழு பேரான, எஸ்.அரவிந்தன், 28; பாதுகாப்பு காவலர், எம்.பூமுகன், 30; ஜசெக உறுப்பினர் வி.சுரேஷ்குமார், 44; மலாக்கா பசுமை தொழில்நுட்பக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ். சந்த்ரு, 39; ஆசிரியர் சுந்த்ரம் ரெங்கன் @ ரெங்கசாமி, 53; கலைமுகிலன், 29 மற்றும் எஸ்.தீரன், 39 ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
கம்ப்லேக்ஸ் ஸ்ரீ நெகெரி,மலாக்கா, ராவாங், சிலாங்கூர், மற்றும் செபெராங் பெராய், பினாங்கு, உள்ளிட்ட பல இடங்களில் பயங்கரவாதக் குழு தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாக சாமிநாதன், பூமுகன், சந்த்ரு, சுந்த்ரம், கலைமுகிலன் மற்றும் தீரன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.