வாஷிங்டன்: ஈரான், தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் கொவிட்-19 நோய் அதிகரித்ததால், இந்நோய் அமெரிக்காவிற்குள் பரவுவதைத் தடுப்பதற்கு, முன்னெச்சரிக்கைகளைத் தொடங்குமாறு அமெரிக்கா செவ்வாயன்று அமெரிக்கர்களிடம் கூறியுள்ளது.
இந்த தொற்றுநோய் உலகளாவிய சந்தைகளை பாதிக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
செவ்வாயன்று ஈரானின் கொரொனாவைரஸ் இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது. இது சீனாவிற்கு வெளியே ஏற்பட்ட அதிகமான மரண எண்ணிக்கையாகும். இத்தாலியில் சுமார் 11 பேர் இறந்துள்ளனர். இந்த வைரஸ் சுமார் 30 நாடுகளுக்கு பரவி உள்ள நிலையில், சீனாவிற்கு வெளியே சுமார் 30-க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டதாக ராய்ட்டர்ஸ் கணக்கிட்டுள்ளது.
ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியாவில் மோசமான நோய்த்தொற்றுகள் ஏற்பட்டது கவலைக்குரியவை என்று உலக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். வைரஸின் உலகளாவிய பரவலைத் தடுக்க தென் கொரியாவும் இத்தாலியும் அவசர நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் வுஹான் நகரில் வனவிலங்குகளிலிருந்து தோன்றியதாக நம்பப்படும் காய்ச்சல் போன்ற நோய் 80,000 பேரை பாதித்து சீனாவில் 2,700 பேரைக் கொன்றுள்ளது.