கோலாலம்பூர்: நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் குழப்பத்திற்கு தாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் தம்மை முழுமையாக ஆதரிப்பதால் யாரை தேர்தெடுப்பது என்பது தெரியாத சூழ்நிலையில் மாட்டிக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
சிறப்பு நேரடி ஒளிபரப்பில் பேசிய அவர், தாம் பதவிக்கு ஆசைப்படுபவர் அல்ல என்று கூறினார்.
“நான் பதவி விலகுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், எல்லா தரப்புகளின் ஆதரவும் எனக்கு இருப்பதாக நான் உணர்கிறேன், அதனால், நான் ஒன்றை மட்டும் தேர்வு செய்ய முடியாது.”
“கூடுதலாக, நான் பதவி விலக மாட்டேன் என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன.”
“எனவே நான் பதவி விலகினேன். எனக்கு அந்த பதவி ஆசையும் இல்லை.” என்று அவர் கூறினார்.
அரசியல் பதவிகள் குறிப்பிட்ட குறிக்கோளை அடையவதற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதாவது மக்களின் நலனைக் காப்பதில் மட்டுமே அரசியல்வாதிகளின் எண்ணம் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
கட்சிகள் சார்பற்ற அரசாங்கத்தை இரு தரப்பும் ஆதரித்தால், அவர் தொடர்ந்து பிரதமர் பதவில் நிலைத்திருக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
“சரியா தவறா எனத் தெரியவில்லை. அரசியல் மற்றும் அரசியல் கட்சிகளை இப்போதைக்கு ஒதுக்கி வைக்க வேண்டும்.”
“முடிந்தால் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாக இல்லாத ஓர் அரசாங்கத்தை நிறுவ முயற்சிப்பேன்.”
“தேசத்தின் நலன்கள் மட்டுமே முதலில் வரும்” என்று அவர் கூறினார்.