கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை காலை தொடங்கி மதியம் வரையிலும் நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வாரியாக இஸ்தானா நெகாராவிற்குள் நுழைந்ததை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
காலையில் பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மற்றும் முக்ரிஸ் முகமட் மாமன்னரைச் சந்தித்தனர்.
அதன் பிறகு முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அரண்மனைக்குள் செல்வதற்கு முன் அங்கிருந்த ஊடகவியலாளர்களுக்கு உணவுகள் வழங்கினார். பெர்சாத்து இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் சாத்திக் பின்பு அரண்மனைக்கு வந்தார்.
அதன், பிறகு அமானா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான, டாகடர் முஜாஹிட் யூசோப், ஹானிபா மைடின், காலிட் சமாட், ஹாசானுடின் முகமட் யூனுஸ், ஆகியோர் முக மலர்ச்சியுடன் அரண்மனைக்குள் நுழைந்தனர். 20 நிமிடங்களுக்குப் பிறகு, மேலும் ஐந்து கார்கள் அரண்மனையில் நுழைந்தன. அவற்றில் டேரல் லீக்கிங் (பெனாம்பாங்) மற்றும் டாக்டர் சுல்கிப்ளி அகமட் (அமானா -கோலா சிலாங்கூர்) இருந்தனர்.
இதனிடையே, அஸ்மின் அலி மற்றும் அவரது அணியினர் அரண்மனையின் மூன்றாவது நுழைவாயிலில் நுழைந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிற்பகல் 1 மணிக்கு மேல் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேருந்து ஒன்றில் அரண்மனை வாயிலை வந்தடைந்தனர். அப்பேருந்தில் லிம் கிட் சியாங், இயோ பி இன், ஹான்னா இயோ மற்றும் கோபிந்த் சிங் ஆகியோர் இருந்தனர்.