கோலாலம்பூர் – “வரலாற்றுப்பூர்வமான தேர்தல் முடிவை மாற்றி மாமன்னர் முடிவெடுத்தார்” என்ற பொருளில் பிரிட்டனின் “தி கார்டியன்” நாளிதழ் எழுதியுள்ள கட்டுரை தவறான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருப்பதாக மாமன்னரின் அரண்மனை அலுவலகம் (இஸ்தானா நெகாரா) இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.
இத்தகைய ஒரு செய்தியை, கார்டியன் மார்ச் மூன்றாம் தேதி தனது தலையங்கத்தில் எழுதி இருக்கிறது.
இச்செய்திக் குறித்து கருத்துகளைத் தெரிவித்திருக்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் மலேசியர்களுக்கு இஸ்தானா நெகாரா, முதலில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக, அரண்மனைக் காப்பாளர் டத்தோ அகமட் பாடில் சம்சுடின் ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்திருக்கின்றார்.
நடந்த சம்பவங்களை கார்டியன் பத்திரிகையின் செய்தி திரித்து வெளியிட்டிருக்கிறது என்றும் அரண்மனையின் அறிக்கை மேலும் கூறியது.
தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் சில விவரங்களைத் தெளிவுபடுத்த விரும்புவதாகத் தெரிவித்திருக்கும் அரண்மனைக் காப்பாளர் “துன் மகாதீர் பதவி விலகலைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையும் இயல்பாகவே பதவி விலகிவிட்டதால், மலேசிய அரசியலமைப்பு சட்டவிதி 43-இன்படி புதிய பிரதமரை நியமிக்கவேண்டிய கட்டாயத்திற்கு மாமன்னர் உள்ளானார். சட்டவிதி 40 (2)(a) நிர்ணயித்தபடி, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வு மாமன்னருக்கு மட்டுமே உரியதாகும். மக்களவை உறுப்பினர்களில் பெரும்பான்மையைப் பெற்ற பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பையும் மாமன்னர் கொண்டிருந்தார். இதன் காரணமாகவே, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் சந்தித்த மாமன்னர் இந்த விவகாரத்தில் தனி அக்கறையும், பெரும் கவனமும் செலுத்தினார்” என்று கூறியிருக்கிறார்.
எல்லாக் கோணங்களிலும் முறையாக சீர்தூக்கிப் பார்த்த பின்னரே மாமன்னர் தனக்குரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அடுத்த பிரதமர் குறித்த முடிவை எடுத்தார் என்பதோடு,எனவே இதனை நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் மாமன்னரின் முயற்சி என்பதில் உண்மையில்லை என்றும் அரண்மனையின் அறிக்கை மேலும் தெரிவித்தது.
கார்டியன் பத்திரிகையின் கட்டுரையை உடனடியாக மறுத்த மலேசிய வெளியுறவு அமைச்சு, இலண்டனிலுள்ள மலேசியத் தூதரகம் மற்றும் இன, அரசியல் கட்சிகளைத் தாண்டி, கார்டியனுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்ட அனைத்து மலேசியர்களுக்கும் அரண்மனை நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
எனவே, எதிர்வரும் காலங்களில் கார்டியன் போன்ற பத்திரிகைகள் மேலும் கவனமுடனும், ஆழ்ந்த பரிசீலனைக்குப் பின்னரும் செய்திகளைப் பிரசுரிக்க வேண்டும் எனவும் அரண்மனை தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டது.