Home நாடு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோருவது மாமன்னரை அவமதிப்பதா? – பாஸ் கட்சியின் பாதை மாறிய பயணம்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோருவது மாமன்னரை அவமதிப்பதா? – பாஸ் கட்சியின் பாதை மாறிய பயணம்

804
0
SHARE
Ad

கோலாலம்பூர் –(மலேசிய நாடாளுமன்றத்தின் பிரதமராக நியமிக்கப்படுபவர் மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருக்க வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டம். அதன்படி ஒரு பிரதமருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்பதை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் நிர்ணயிக்கும் உரிமையும், ஜனநாயக நாடாளுமன்ற நடைமுறைகளில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். பாஸ் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் இதற்கு நேர்மாறாக, அவ்வாறு செய்வது மாமன்னருக்கு எதிரான செயல் என்று கூறுகிறார். இதுகுறித்து விவாதிக்கிறார் எழுத்தாளர் நக்கீரன்)

கடந்த பிப்ரவரி மாத கடைசி வாரத்தில் நாட்டின் அரசியல் களமும் நிருவாகத் தலைமையும் எதிர்கொண்ட அல்லோலகல்லோலத்திற்குப் பின் ஒரு வழியாக நாட்டின் பிரதமரை மாமன்னர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக அமைச்சரவையே இல்லாமல் பிரதமர் மட்டும் ஒற்றைத் தலைமையாக இருந்து நாட்டை வழிநடத்தி வருகிறார். நாடு இதுவரை எதிர்கொண்டிராத புதுமைச் சூழல் இது. இதற்கெல்லாம் காரணம், முன்பு ஆண்ட கூட்டணியைச் சேர்ந்த ஒரு கட்சி, எதிரணியைச் சேர்ந்த கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முனைந்திருப்பதால் அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பதில் பல்வேறு கூறுகளை பிரதமர் எடைபோட வேண்டி இருப்பதுதான்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், மக்கள் நீதிக் கட்சி (பிகேஆர்), ஜனநாயக செயல் கட்சி (ஜசெக), அமானா, வாரிசான் கட்சி, துன் மகாதீர் உட்பட பெர்சத்து கட்சியின் ஒரு பிரிவினர் உள்ளிட்ட தரப்பினர் தங்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்று அறிவித்ததுடன் தங்களின் பக்கம் இருக்கும் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், நாடாளுமன்றத்தைக் கூட்டி பிரதமர் தன் பெரும்பான்மையை முதற்கண் நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், மார்ச் மாதம் 9-ஆம் தேதி கூட வேண்டிய நாடாளுமன்றம், மே  18-ஆம் நாளுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிரதமருடன் அணி சேர்ந்துள்ள அம்னோ கட்சியின் செயலாளர், நாடாளுமன்றக் கூட்டத்தை எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் தள்ளி வைக்கலாம் என்று சொன்னது, அந்தக் கட்சியின் பாரம்பரியத்திற்கே இழுக்கானது. ஜனநாயக அரசியலை அந்தக் கட்சி எந்த அளவிற்கு மதிக்கிறது என்பதற்கும் இது தக்க சான்றாக அமைகிறது.

தற்பொழுது, அம்னோ கட்சியை விஞ்சும் அளவுக்கு பாஸ் கட்சி அக்கப்போரான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதமர், நாடாளுமன்றத்-தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோருவது மாமன்னரை அவமதிப்பதற்கு ஒப்பாகும் என்று, அதுவும் அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஹடி அவாங் தெரிவித்திருப்பது, ஜனநாயகத் தன்மையை அப்பட்டமாக மீறும் அக்கட்சியின் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இப்போது மட்டுமல்ல; நாட்டின் பதின்மூன்றாவது பொதுத் தேர்தல் காலத்தில் இருந்தே பாஸ் கட்சி விநோதமாகத்தான் அரசியல் பயணம் மேற்கொண்டிருக்கிறது.

உண்மையில் இந்தக் கட்சிக்கென்று எத்தனையோ பெருமை உண்டு. நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 204 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்கூட சொந்தக் கட்சியின் பலத்தில் வெற்றிபெறவில்லை. தான் சார்ந்த கட்சி இடம்பெற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் வென்றனர். மாறாக, பாஸ் கட்சியைச் சேர்ந்த 18 பேர் மட்டுமே சொந்தக் கட்சியின் வலிமையில் நாடாளுமன்றத்திற்கு தேர்வு பெற்றனர்.

அதைவிட, கெடா சட்டமன்றத்தில் பாதி இடங்களை தனித்து நின்று வென்றதுடன் ஆட்சியை நூலிழையில் தவறவிட்டது. ஆனாலும், கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநில ஆட்சிகளை தனித்தே கைப்பற்றியது.

இப்படிப்பட்ட பெருமைக்கெல்லாம் உரிய கட்சி, தேசிய அரசியலில் முடிந்தவரை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத அரசியலை மேற்கொண்டு வருகிறது.

நம்பிக்கைக் கூட்டணியின் நிருவாகத் தலைமை மாற்றம் என்பது அந்த அணிக்குள்ளே நிகழும் பிரச்சினை. அதில், எதிர்முகாமைச் சேர்ந்த பாஸ் தலையிட வேண்டிய அவசியமில்லை. 14-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன், இரு வருடங்கள் மட்டுமே நான் பிரதமராக நீடிப்பேன். பின்னர், டத்தோஸ்ரீ அன்வாரிடம் அந்தப் பதவியை ஒப்படைப்பேன் என்று அறிவித்த மகாதீர், பிரதமர் ஆனதும் தான் அளித்த வாக்குறுதியில் இருந்து தடுமாறினார்.

இதனால், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக புதுப்புது காட்சிகள் அரங்கேறிய நிலையில், எரிகிற நெருப்பில் நெய்யை வார்ப்பதைப் போல பாஸ் கட்சி செயல்பட்டது; இந்தத் தவணைக் காலம் முழுவதும் துன் மகாதீரே பிரதமராக நீடிக்க பாஸ் கட்சி ஆதரவளிக்கிறது என்று வாரம் தவறாமல் அறிவித்து வந்தது.

இப்படிப்பட்ட நிலையில், ஏதோவொரு திட்டத்தை உள்ளீடாகக் கொண்டு, அதை மிக நுட்பமாக அரங்கேற்றும் வகையில் பிப்ரவரி 24-ஆம் நாள் தான் வகித்த பிரதமர் பொறுப்பில் இருந்து சுயமாக விலகினார் மகாதீர். தொடர்ந்து இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்ட மகாதீர், கட்சிகள் சாராமல் ஒரு தேசிய அமைச்சரவையை அமைக்க விரும்புவதாகவும் தானே தொடர்ந்து பிரதமராக இருக்கப் போவதாகவும் அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

மகாதீர் மலைபோல நம்பியிருந்த பாஸ் கட்சி, இந்த நேரத்தில் மகாதீருக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதாக அறிவித்தது. அத்துடன் நில்லாமல், நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று கோரிக்கையையும் அறிக்கையையும் மாறி மாறி விட்டது.

திடீரென்று ஒரு புதுக் கணக்கு வகுத்து ஆளுந்தரப்பில் இருந்து விலகிய பெர்சத்துக் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு ஆதரவுக்கரம் நீட்டியது பாஸ். மாமன்னரும் அவரைப் பிரதமராக அறிவித்து பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். ஆனால், நாடாளுமன்றம் இன்னும் கூட்டப்படவில்லை; அமைச்சர்களும் அறிவிக்கப்படவில்லை.

மற்றத் தரப்போ தங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இதை நிரூபிப்போம்; பிரதமரும் நம்பிக்கை வாக்கைக் கோர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இது, ஜனநாயக முறையும் கூட.

ஆனால், பிரதமர் நம்பிக்கை வாக்கைக் கோர வேண்டும் என்று கோருவது மாமன்னரை அவமதிப்பதாகும் என்று பாஸ் கட்சித் தலைவர் குறிப்பிடுவது முற்றிலும் அபத்தமானது. நாட்டின் தேசிய அரசியல் எதிர்க்கொண்ட நெருக்கடியை செம்மாந்த முறையில் கையாண்ட மாமன்னர், பிரதமரையும் தெரிவு செய்து பதவிப் பிரமாணமும் செய்து வைத்துவிட்டார். மாமன்னரின் பங்கு மிகவும் சிறப்பாக முடிந்து விட்டது.

இனி, நாடாளுமன்றம் கூடி அடுத்தக் கட்டத்திற்கு நகர வேண்டும். ஆனால், பாஸ் கட்சி இணைந்துள்ள தரப்பு பலவீனமாக இருக்கிறதாலோ என்னவோ அந்தத் தரப்பு தங்களுக்கான ஆதரவுப் பட்டியலை வெளியிடவும் இல்லை. நாடாளுமன்றம் கூட்டப்படுவதில் அக்கறையும் காட்டவில்லை. இப்பொழுது, மாமன்னரை துணைக்கு அழைத்துக் கொண்டு அவரின் பின்னால் ஒதுங்கிக் கொள்ளப் பார்க்கிறது.

வெண்வண்ண வட்டத்தை உள்ளடக்கிய பச்சை வண்ணக் கொடிகள் படபடக்க தனிப்பெரும் செல்வாக்கோடும் எழுச்சியோடும் விளங்கும் பாஸ் கட்சிக்கென்று ஒரு தனி மரியாதை தேசிய அளவில் நிலவுகிறது. 14 கட்சிகள் அடங்கிய தேசிய முன்னணியையே பொதுத் தேர்தல்களில் மண்டியிட வைத்து மாநில ஆட்சிகளை தன்னந்தனியாகக் கைப்பற்றிய அந்தக் கட்சியின் வரலாற்றை இம்மலைத்திருநாட்டில் வேறு எந்தக் கட்சியாலும் விஞ்ச முடியாது.

அப்படிப்பட்டக் கட்சி, அண்மைக் காலத்தில் தவறானப் போக்கை கடைப்பிடிக்கிறது.

கடந்த பொதுத் தேர்தல் நெருங்கி வந்த சமயத்தில் தாம் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட, தேசிய முன்னணி வெல்ல வேண்டும்; குறிப்பாக நஜிப் பதவியில் தொடர வேண்டும் என்பதற்காக நம்பிக்கைக் கூட்டணியின் வாக்கை சிதறச் செய்யும் நோக்குடன், தீபகற்ப மலேசியாவில் மட்டும் நூறு இடங்களில் தனியாகப் போட்டியிட்டது. இதன்வழி, நஜிப்பின் கைப்பாவையாக பாஸ் மாறியது பளிச்செனத் தெரிந்தது.

ஹுடுட் சட்ட அமலாக்கத்தை மட்டும் ஒற்றை இலக்காகக் கொண்ட இந்தக் கட்சி, தேசிய முன்னணியில் நேரடியாக இடம்பெறாமல், மசீச-மஇகா கட்சிகளையும் வாயடைக்கச் செய்துவிட்டு, தேசிய முன்னணி வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் எதிரணி ஓட்டுக்களைப் பிரிக்கும் நோக்கில் தனி ஆவர்த்தனம் புரிந்தது.

தேர்தலுக்குப் பின், மகாதீர் – அன்வார் இடையே பிரதமர் பதவி தொடர்பாக நிலவிய நிழல் யுத்தத்தில் மூக்கை நுழைத்த பாஸ் கட்சி, ஐந்தாண்டு கால தவணை முழுவதும் மாகதீருக்கு ஆதரவென பறைசாற்றி விட்டு, அவருக்கு நெருக்கடியான நேரத்தில் காலை வாரி விட்டது.

இப்போது, தேவை இல்லாமல் மாமன்னரை அரசியல் களத்தில் இழுக்கப் பார்க்கிறது.

உண்மையில், மாமன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து, அவர்களின் கருத்தை நேரில் அறிந்து அதன் பின்னர்தான் ஒரு முடிவுக்கு வந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில்தான் மாமன்னர் பிரதமரைத் தீர்மானித்தார்.

மொத்தத்தில், நாடாளுமன்றத்தில் யாருக்குப் பெரும்பான்மை என்பதைத்தான் மாமன்னர் அளவுகோலாகக் கொண்டார்.

ஆனால், அந்த நாடாளுமன்றத்தைக் கண்டு ஹடி அவாங் பின் வாங்குவதும் மிரளுவதும் ஏன்? இதன் உச்சக்கட்டமாக மாமன்னருக்குப் பின்னால் ஒதுங்க முற்படுவதும் ஏன் என்னும் கேள்வி பலமாக எதிரொலிக்கிறது.

எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்ற அடிப்படையில் அடுத்த அரசாங்கத்தை அமைக்க முன்வந்திருப்பவர்கள் – அதே அடிப்படையில் பிரதமர் பதவியையும் ஏற்றிருப்பவர் – என அனைவரும் கூடி தாங்கள் கூறும் பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டியதுதான் சரியான ஜனநாயக நடைமுறையாக இருக்க முடியும்.

– நக்கீரன்.