கோலாலம்பூர்: பிரதமர் தேர்வு மக்களவைக்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ராயிஸ் யாத்திம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராயிஸ் யாத்திம் பெர்சாத்து கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்பதோடு, அக்கட்சியின் ஜெலுபு தொகுதிக்கான தலைவருமாவார்.
“மார்ச் 2-ஆம் தேதி பிரதமர் யார் என்பதை மக்களவை தீர்மானிக்கும் என்று ஏன் இன்னும் பொங்கி எழுகிறீர்கள்? மாமன்னரின் கைகளில் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் உள்ளது, மக்களவையில் இல்லை. இரண்டு நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேர்காணலின் முடிவு குறித்து மாமன்னர் ஏற்கனவே முடிவு செய்திருப்பார்,” என்று அவர் கூறினார்.
ஆகவே, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் மாமன்னருக்கு “சரியான ஆலோசனையை” வழங்குமாறு ராயிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
“அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் தயவுசெய்து மாமன்னருக்கு முறையான ஆலோசனையை வழங்குங்கள். மக்களவையில் நம்பிக்கை அல்லது நம்பிக்கையில்லா தீர்மான வாக்குகளை மட்டுமே கொண்டு வர முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.