கோலாலம்பூர் – எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் மக்களவையின் சிறப்புக் கூட்டத்தில் அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என துன் டாக்டர் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.
எனினும் மலேசிய அரசியலமைப்பு சட்டம் ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை மக்களவைக்கு வழங்கவில்லை என நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார்.
“அரசியல் அமைப்பு சட்டம் 43 (2) (a) விதியின்படி நாட்டின் மாமன்னரைத் தவிர வேறு எந்த அமைப்புக்கோ, நபருக்கோ பிரதமரை நியமிக்கும் அதிகாரம் இல்லை” என்பதையும் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
அந்த அதிகாரத்தை நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கவும் முடியாது என்றும் விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.
“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதில் மாமன்னர் மனநிறைவு கொள்கிறாரோ அவரையே பிரதமராக நியமிக்கும் அதிகாரம் மாமன்னருக்கு மட்டுமே உண்டு. எனக்குத் தெரிந்து மக்களவை உறுப்பினர்கள் பிரதமரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற சட்டவிதிகள் இல்லை” எனவும் மஇகா தேசியத் தலைவருமான விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின்வழி நாட்டின் அடுத்த பிரதமர் பெரும்பான்மை மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என மகாதீர் விடுத்திருக்கும் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் விக்னேஸ்வரன் இந்த விளக்கத்தை வழங்கினார்.
“இடைக்காலப் பிரதமர் என்பவர் நாட்டின் தலைமைப் பொறுப்பில் மட்டுமே இருப்பார். அவர் இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை அவர் கொண்டிருக்கிறார் என்பதால் அல்ல! மாறாக, மாமன்னரின் சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே மகாதீர் இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்றும் விக்னேஸ்வரன் மேலும் விளக்கினார்.
மாமன்னர் ஒருவர் மட்டுமே அடுத்த பிரதமரை நியமிக்க முடியும் என்பதை விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தினார்.