கோலாலம்பூர்: கடந்த 25-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லா கட்டளைக்கு இணங்க நேர்காணலில் கலந்து கொண்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசிய பொதுச்செயலாளருக்கு மாமன்னர் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அரண்மனை மேலாளர் டத்தோ அகமட் பாசில் ஷாம்சுடின் தெரிவித்துள்ளார்.
இந்த நேர்காணலின் மூலமாக மாமன்னர் பெரும்பான்மையைக் கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கண்டறியமுடியவில்லை என்று இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, மக்களவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசோப் மார்ச் 2-ஆம் தேதி, இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சிறப்பு அமர்வை நடத்த திட்டமிட்டதை இரத்து செய்ததை, மாமன்னர் ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் அரசியலமைப்பிற்கு ஏற்ப மக்கள் மற்றும் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு நல்லதொரு முடிவை மாமன்னர் கூடிய விரைவில் எடுப்பதாக அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக தேர்வு செய்ய அரண்மனை வாய்ப்பு வழங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.