பெட்டாலிங் ஜெயா – இன்று காலையில் துன் மகாதீரைச் சந்தித்த பின்னர் இங்குள்ள ஈஸ்டின் தங்கும் விடுதிக்கு வந்து பக்காத்தான் தலைவர்களைச் சந்தித்த பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆட்சி அமைக்கப் போதுமான பலம் தங்களுக்கு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து 92 நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன் அன்வார் தற்போது (பிற்பகல் 1.45 மணி) மாமன்னரைச் சந்திக்க அரண்மனைக்குச் சென்றுள்ளார்.
மாமன்னரைச் சந்திக்கச் செல்லும் முன் பத்திரிகையாளர்களிடம் பேசிய அன்வார் மீண்டும் மகாதீரை பிரதமராக ஏற்றுக் கொண்டு தங்களின் சீர்திருத்தப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம் என்றும் கூறினார்.
அன்வார் ஈஸ்டின் விடுதியை விட்டு வெளியேறியதும், பத்திரிகையாளர்களிடம் பேசிய பிகேஆர் கட்சியின் தொடர்புக் குழு இயக்குநரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான பாஹ்மி பாட்சில் 92 உறுப்பினர்களை விட கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும், எனினும் அவர்கள் யார் என்பதையோ, அன்வார் மாமன்னருக்குக் கொண்டு செல்லும் கடிதத்தின் உள்ளடக்கத்தையோ தற்போதைக்கு வெளியிட முடியாது என்றும் தெரிவித்தார்.