கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சியின் ஜோகூர், சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரும் முன்னாள் கல்வி அமைச்சருமான மஸ்லீ மாலிக் ஆரம்பத்தில் மொகிதின் யாசின் பக்கம் இருக்கிறார் என்றே கருதப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் நேற்று துன் மகாதீரைப் பிரதமராக ஆதரிக்கும் அணிக்குத் திரும்பியிருக்கிறார்.
தான் மொகிதினை விட்டு விலகி மகாதீர் அணிக்குத் திரும்பியது ஏன் என தனது முகநூல் பக்கத்தில் விளக்கத்தையும் அளித்திருக்கிறார் மஸ்லீ மாலிக்.
“நான் எப்போதுமே கட்சிக் கட்டுப்பாட்டின்படி கட்சி எடுத்த முடிவுகளைத்தான் பின்பற்றி வந்திருக்கிறேன். அரசியலில் என்னைப் பொறுத்தவரை மக்களுக்காகப் போராடவும், மலாய்க்கார இனம், இஸ்லாமிய மதம் ஆகியவற்றுக்காகப் பாடுபடவும்தான் நான் உறுதி பூண்டிருந்தேன். கட்சி முடிவின்படி மொகிதின் யாசினைப் பிரதமராக ஆதரிக்க நானும் முடிவு செய்தேன். ஆனால், நேற்று சனிக்கிழமை மொகிதின் யாசின் இல்லத்திற்கு சென்றபோது அங்கு அம்னோ தலைவர்களுடன் ஒன்றாக அமர்ந்திருக்க என்னால் இயலவில்லை. கனத்த இதயத்தோடுதான் அங்கு அமர்ந்திருந்தேன்” என மஸ்லி மாலிக் கூறியிருக்கிறார்.
“மொகிதின் வீட்டில் இருந்தவர்களில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்தவர்கள், இருந்தார்கள். அவர்களில் கல்வி அமைச்சில் ஊழல் புரிந்தவர்களும் இருந்தார்கள். அவர்கள் விட்டுச் சென்ற பிரச்சனைகளை நான் கல்வி அமைச்சராகக் கையாள வேண்டி இருந்தது. இவர்களையெல்லாம் மீண்டும் நாட்டுத் தலைவர்களாக ஏற்றுக் கொள்வதா என்ற கேள்வியும் எனக்குள் பிறந்தது. மக்களால் நிராகரிக்கப்பட்ட இவர்களுடன் – நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கியிருக்கும் இவர்களுடன் – ஒன்றாக அமர்ந்து பணியாற்றுவதா, அவர்களையே மீண்டும் நாட்டுத் தலைவர்களாக அனுமதிப்பதா? எனவும் என்னை நானே கேட்டுக் கொண்டேன். அதன்பிறகுதான், எனக்கு நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசனை கேட்டேன். நல்ல முடிவை வழங்க இறைவனைத் தொழுதேன். அதன் பிறகே, நேற்று பிற்பகல் 4.00 மணிக்கு மகாதீரிடம் வந்து அவர் அடுத்த பிரதமராக எனது ஆதரவை வழங்கினேன்” என மஸ்லீ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“இதுவே எனது இறுதி முடிவு. எனது அரசியல் நலன்களை விட நாட்டின் நலன்கள் அதைவிட முக்கியம்” என்றும் மஸ்லீ தெரிவித்துள்ளார்.