கோலாலம்பூர் – டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தில் மஇகா இணையும் என்றும் தங்களின் பிரதிநிதிகளின் பட்டியலை கட்சி புதிய அரசாங்கத்தின் தலைமைத்துவத்திற்கு அனுப்பி வைத்துள்ளது என்றும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மஇகாவின் சார்பில் புதிய அமைச்சர் அல்லது அமைச்சர்கள் இடம் பெறுவார்களா, மேலும் புதிய துணை அமைச்சர்கள் இடம் பெறுவார்களா என்ற கேள்விகளும் பிறந்துள்ளன. தற்போது மஇகா சார்பில் மக்களவை உறுப்பினராக தாப்பா நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்து டத்தோஸ்ரீ எம்.சரவணன் மட்டுமே இருந்து வருகிறார். கட்சியின் துணைத் தலைவராகவும் அவர் இருப்பதால், அவருக்கு முழு அமைச்சர் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளதாக மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொகிதின் தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தை ஆதரிக்கும் மஇகா மட்டுமே இந்தியர் சார்பு கட்சியாக இருந்து வருகிறது. வழக்கம்போல் அமைச்சரவையில் இந்திய அமைச்சர் ஒருவர் இடம் பெறலாம் என்றால் அது மஇகாவின் பிரதிநிதியாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
மஇகாவின் சார்பில் செனட்டர்களாக இருப்பவர்கள் தற்போது டத்தோ டி.மோகன் மற்றும் மஇகா கெடா மாநிலத் தலைவர் டத்தோ எஸ்.ஆனந்தன் ஆகிய இருவர் மட்டுமே.
கடந்த நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் நான்கு இந்திய அமைச்சர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய அமைச்சர்கள் கூடுதலாக நியமிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.
மஇகா சார்பில் புதிய செனட்டர்கள் நியமிக்கப்படுவார்களா?
அல்லது, மஇகா சார்பில் புதியதாக செனட்டர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் அமைச்சராகவோ, துணையமைச்சராகவோ பதவியேற்கும் வாய்ப்பையும் நிராகரிப்பதற்கில்லை. நாடாளுமன்ற மேலவையில், 14 செனட்டர்களுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக விக்னேஸ்வரன் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
ஒரு காலகட்டத்தில், மஇகா ஆளும் தேசிய முன்னணி அரசாங்கத்தில் இடம் பெற்றிருந்தபோது, மஇகாவுக்கு 6 செனட்டர்கள் வரை இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. எனவே, காலியாக இருக்கும் 14 செனட்டர்களுக்கான இடங்களில் மஇகா சார்பில் மேலும் ஓரிரு இடங்கள் ஒதுக்கப்பட விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்து அந்தக் கோரிக்கையும் ஏற்கப்படலாம்.
அதன்வழி புதியவர்கள் செனட்டர்களாக நியமிக்கப்பட்டு துணை அமைச்சர், அமைச்சர் பொறுப்புகளில் அமர்த்தப்படலாம்.
விக்னேஸ்வரனின் செனட்டர் பதவிக் காலம் எதிர்வரும் ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்பதால் அவர் தொடர்ந்து நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவியை வகித்து வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, ஜூன் மாதம் வரையில் மொகிதின் யாசின் அரசாங்கம் தாக்குப் பிடித்து மேலும் தொடர்ந்தால், அதன் பிறகே, விக்னேஸ்வரனுக்குரிய அரசாங்கப் பதவி முடிவு செய்யப்படும்.
மித்ரா இனி யார் வசம்?
இந்தியர்கள் விவகாரம் என்னும்போது, நமது நாட்டின் அரசாங்க அமைப்பில் முக்கிய இடம் வகிப்பது அன்று செடிக் என்ற பெயரிலும் தற்போது மித்ரா என்ற பெயரிலும் இயங்கிவரும் இந்தியர்களுக்கான சமூக பொருளாதார மேம்பாட்டு இலாகாவாகும்.
2018-க்கு முன்பாக மஇகாவின் முயற்சியில் அப்போதைய பிரதமர் நஜிப் துன் ரசாக் வழிகாட்டுதலின்பேரில் உருவாக்கப்பட்ட தனி இலாகா இதுவாகும்.
இந்திய சமூகத்திற்கென ஆண்டுக்கு 100 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீட்டைப் பெறும் இலாகாவாக மித்ரா திகழ்கிறது. இதுவரையில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் மித்ராவுக்கு பொறுப்பு அமைச்சராக பிரதமர் துறை அமைச்சர் பொன் வேதமூர்த்தி இருந்து வந்தார்.
வேதமூர்த்தி துன் மகாதீர் தலைமைத்துவத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். எனவே, அவர் மீண்டும் மொகிதின் அரசாங்கத்தில் இடம் பெறுவதற்கு வாய்ப்பில்லை.
இனி மொகிதின் அமைச்சரவையில் இடம் பெறப் போகும் இந்திய அமைச்சர்தான் மித்ராவுக்கும் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, அந்த மஇகா அமைச்சர் யார்?
மீண்டும் அந்த அமைச்சரின் கரங்களில் மித்ரா ஒப்படைக்கப்பட்டு, அதன்வழி மித்ராவின் செயல்பாடுகள் மீண்டும் மஇகாவின் மேற்பார்வையில் தொடருமா என்ற கேள்விகளுக்கு அடுத்த சில தினங்களில் விடைகள் கிடைத்து விடும்!
எனினும், மொகிதின் அடுத்த நாடாளுமன்றம் கூடும் தேதியில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா?
அவர் அமைக்கப் போகும் அரசாங்கம், தொடர்ந்து வலுவுடன் திகழுமா? அல்லது நம்பிக்கைக் கூட்டணியைப் போல் உட்கட்சி மோதல்களால் உடைந்து கலையுமா? போன்ற கேள்விகளுக்கான விடைகளின் அடிப்படையில்தான் மஇகா அமைச்சர்களின் நியமனங்களும் – அவர்கள் தொடர்ந்து அரசாங்கத்தில் நிலைத்திருப்பார்களா – எவ்வளவு காலத்திற்கு நீடித்திருப்பார்கள் – போன்ற கேள்விகளுக்கான விடைகளும் அமையும்.