கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி வீழ்ச்சிக்குப் பின்னர், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், கட்சியை விட்டு வெளியேறியவர்கள் ஊழலை நிராகரித்தல் மற்றும் அதிகார விதிமீறல் உள்ளிட்ட தங்கள் போராட்டத்திற்கு துரோகம் இழைத்துள்ளனர் என்று காணொளி ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
பிகேஆர் அதன் கொள்கைக்கு இசைவான, கடினமான நிலைப்பாட்டை எடுத்திருப்பதை அன்வார் நினைவுப்படுத்தினார்.
“நம் நாட்டை அழித்த பழைய குழுக்களுடன் கூட்டணி வைக்க நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.”
“நாம் நம் கொள்கையுடன் நிற்பதை தேர்ந்தெடுத்தோம். நம்மை விட்டு வெளியேறியவர்கள் நம் போராட்டத்திற்கு துரோகம் இழைத்துள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் நோக்கம் எப்போதுமே ஊழலை நிராகரிப்பது, மற்றவர்களின் உரிமைகளுக்கு பாதகம் செய்யாமல் மலாய்-முஸ்லிம் நலன்களை நிலைநிறுத்துவதும், பொருளாதார வளர்ச்சியின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்வதும்தான் என்று அன்வார் மேலும் தெளிவுப்படுத்தினார்.
“ஒரு சிலர் நம் நாட்டின் செல்வத்தை கொள்ளையடிக்க நாம் அனுமதிக்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.