கோலாலம்பூர்: நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாகத்தான் தாம் சட்டத்துறைத் தலைவர் பதவியிலிருந்து விலகியதாக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோனி தோமஸ் தெரிவித்துள்ளார்.
“சட்டத்துறைத் தலைவராக எனது நிலைப்பாடு ஓர் அரசியல் நியமனம் மற்றும் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களால் செய்யப்பட்டது” என்று அவர் எப்எம்டியிடம் தெரிவித்தார்.
“பிரதமர் தனது பதவியிலிருந்து விலகியதும், நான் அவரால் நியமிக்கப்பட்டதால் அவ்வாறு செய்வது எனது பொறுப்பாகும். நான் ஒதுங்கிப் போவதும், உள்வரும் பிரதமரை தனது சொந்த சட்டத்துறைத் தலைவரை நியமிக்க அனுமதிப்பதும் முக்கியம்” என்று அவர் கூறினார்.
சட்டத்துறைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கான தனது முடிவு இங்கிலாந்து மரபுக்கு ஏற்பவும் முதிர்ச்சியடைந்த ஜனநாயகத்தை கடைபிடிக்கும் பிற நாடுகளிலும் உள்ளது என்றும் தோமஸ் கூறினார்.
“நான் பதவியில் இருந்த கடைசி நாள் வரை நீதியை நாட்டுவதற்கும், அநீதியைத் தடுப்பதற்கும் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். சேவை செய்வதற்கான பாக்கியத்திற்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) மாலை டாக்டர் மகாதீருக்கு பதவி விலகல் கடிதத்தை வழங்கிய பின்னர் தோமஸ் அதிகாரப்பூர்வமாக சட்டத்துறைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.