
இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு மலாக்கா ஆளுநர் துன் டாக்டர் முகமட் காலில் யாக்கோப் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் ஆயர் குரோவில் ஆளுநர் மாளிகையில் உள்ள டேவான்ஸ்ரீ உத்தாமா மண்டபத்தில் இந்த பதவியேற்பு சடங்கு நடைபெறும் என்றும் மலாக்கா மாநில செயலாளர் டத்தோஸ்ரீ ஹாசிம் ஹசான் நேற்று புதன்கிழமை (மார்ச் 4) வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்ட பின்னர் அடுத்த 7 நாட்களுக்குள் புதிய முதலமைச்சர் மாநில அரசாங்கத்தை அமைப்பார் என்றும் மாநிலச் செயலாளர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில் புதிய முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வதில் அம்னோ உறுப்பினர்களிடையே இழுபறி நிலவுவதால், திடீர்த் தேர்தலுக்கு மலாக்கா மாநிலம் உள்ளாகலாம் என்ற நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.
மலாக்கா மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மையை இழந்தாலும் நடப்பு முதலமைச்சர் அட்லி சஹாரி (படம்) மலாக்கா முதல்வர் பதவியிலிருந்து விலக மறுத்ததால், அவர் மலாக்கா ஆளுநரால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
13 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அம்னோ, லெண்டு சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சுலைமான் முகமட் அலியை முதலமைச்சராகப் பரிந்துரைத்துள்ளதாக அறியப்படுகிறது. 55 வயதான சுலைமான், நற்பெயர் கொண்டவர் என்பதோடு, மாநிலத்தின் பல்வேறு இனங்களால் நன்கு விரும்பப்படுபவராக இருப்பதால் இந்த பதவிக்கு சிறந்த வேட்பாளர் அவர்தான் என்று அம்னோ கருதுகிறது.
எனினும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பெர்சாத்து கட்சி பாயா ரும்புட் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் ரபிக் நைசாமொகிதினை முதலமைச்சராக முன்மொழிந்துள்ளது.
28 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மலாக்கா மாநிலத்தில் அண்மையில் பிகேஆர் கட்சியின் டத்தோ முகமட் ஜைலானி (ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர்), ஜசெகவின் டத்தோ நோர்ஹிசாம் ஹசான் பக்தி (பெங்கலான் பத்து சட்டமன்ற உறுப்பினர்) ஆகிய இருவரும் நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகி பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்தனர். அவர்கள் இருவரின் நிலைப்பாடு இன்னும் வெளிப்படையாகத் தெரியவில்லை.
மலாக்கா மாநில முதலமைச்சர் நியமனத்தில் சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து இல்லையென்றால் மாநில சட்டமன்றத்திற்கு திடீர் தேர்தல் நடத்தப்படலாம்.