கோலாலம்பூர்: முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், நேற்று புதன்கிழமை (மார்ச் 4) நடைபெற்ற அவரது வழக்கு விசாரணையின்போது, அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்களை உயர்நீதிமன்றம் இரகசிய முறையில் வெளியிடவேண்டும் என்று விடுத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்ததை அடுத்து நீதிமன்றத்தில் உணர்ச்சிவசப்பட்டார்.
தொழிலதிபர் டான்ஸ்ரீ சாய் கின் காங்கிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், புத்ராஜயா நாடாளுமன்ற உறுப்பினருமான அவரை, துணை அரசு வழக்கறிஞர் ஜூலியா இப்ராகிம் குறுக்கு விசாரணை செய்த போது அவர் கோபப்பட்டார்.
“நான் என்னை அறிவிக்க விரும்பவில்லை என்று நான் கூறும்போது, அதற்கான காரணம் பகிரங்கமாக உங்களுக்குத் தெரியும். இப்போது எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. ஏறக்குறைய ஒரு பில்லியன் (சொத்துகளை) நான் குறிப்பிட்ட பிறகு, அவர்கள் அதை பரபரப்பாக்க விரும்புவார்கள். அதனால்தான் நான் அதைத் தடுக்க நினைக்கிறேன், ” என்று அவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தெரிவித்தார்.
முன்னாள் அம்னோ பொதுச்செயலாளருமான தெங்கு அட்னானின் வழக்கறிஞர் டத்தோ டான் ஹோக் சுவான் குறுக்கிட்டு, அவரை அமைதிப்படுத்தினார்.
முன்னதாக, நீதிபதி முகமட் ஜெய்னி மஸ்லான், சொத்து அறிவிப்பு தொடர்பான தனது முடிவை வழங்குவதில், விசாரணை நியாயமாக நடத்தப்பட வேண்டுமென்றால், அது வெளிப்படையாக செய்யப்பட வேண்டும் என்றும், எனவே நீதிமன்றம் கண்டதை, கேட்டதைப் பார்க்கவும் கேட்கவும் பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்றும் தீர்ப்பளித்தார்.
மேலும், 69 வயதான தெங்கு அட்னான் நீதிமன்றத்தில் அவரது விண்ணப்பம் ஏற்கப்படுவதற்கு போதுமான காரணத்தைக் காண்பிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
“விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படுவது மட்டுமல்லாமல், நியாயமான முறையில் நடத்தப்படுவதையும் காண வேண்டும்” என்று நீதிபதி மேலும் கூறினார்.
2001-ஆம் ஆண்டு முதல் அமைச்சரவையில் தனது பதவிக்காலத்தில் தனது சொத்துகளை மூன்று பிரதமர்களிடம் அறிவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்த தெங்கு அட்னானின் வழக்கறிஞர், அவர் துன் டாக்டர் மகாதீர் முகமட், துன் அப்துல்லா அகமட் படாவி மற்றும் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிடம் தமது சொத்து விவரங்களை அறிவித்ததாகக் குறிப்பிட்டார்.
2001- ஆம் ஆண்டில் டாக்டர் மகாதீருக்கு அறிவிக்கப்பட்ட மொத்த சொத்துகள் குறித்து டான் மேலும் கேள்வி எழுப்ப, தெங்கு அட்னான் “அது 900 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.
2006-ஆம் ஆண்டில் தனது சொத்துகளான 711,325,822 ரிங்கிட்டை அப்துல்லாவிடம் அறிவித்ததையும், 2013 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் முறையே 691,770,649 ரிங்கிட் மற்றும் 782,748,061 ரிங்கிட்டை நஜிப்பிடம் அறிவித்ததையும் அவர் உறுதிப்படுத்தினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 14 -ஆம் தேதி, ஊழல் தடுப்பு ஆணையம் தெங்கு அட்னானுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்ததை அடுத்து அவர் தற்போது அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.