கோலாலம்பூர் – இன்று வெளியிடப்பட்ட 2019-ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, வெற்றிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், தங்களின் கல்விப் பயணத்தில் அவர்களின் வெற்றிகள் தொடரவும் பாராட்டு தெரிவித்தார்.
“கல்வி என்பது ஒருவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பம் – சமுதாயம் சார்ந்தவர்களையும் வாழ வைக்கின்றது என்ற கோட்பாட்டினை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். அந்த வகையில், எஸ்பிஎம் தேர்வு எழுதி வெற்றிப் பெற்ற இந்திய மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
“தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளிவரை அயராது உழைத்து, இந்த எஸ்பிஎம் தேர்வில் சிறப்பாகப் பயின்று – தேர்வு எழுதிய மாணவர்கள் அடுத்தக் கட்ட நிலைக்குச் செல்ல தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும். அடுத்தக்கட்ட நிலை என்பது தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் உயர் கல்வியை நோக்கித் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் அந்த மாணவர்களை கேட்டுக் கொண்டார்.
“கல்வி ஒன்றே ஒருவரின் வாழ்க்கையை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான், மஇகா இந்திய மாணவர்களின் கல்வி விவகாரங்களில் முக்கியப் பங்காற்றி வருகிறது. கடந்த காலங்களில் மாணவர்கள் சிறப்புடனும், ஊக்கத்துடனும் பயில வேண்டும் என்ற நோக்கத்தில்தான், மஇகா, எம்ஐஇடி என்ற கல்வி அறவாரியத்தின் வழி ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் டேஃப் கல்லூரிகளில் பயில்வதற்குத் தேவையான கடனுதவி மற்றும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றது” என்றும் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.