கோலாலம்பூர்: அரசாங்கம் மாறினாலும் இல்லாவிட்டாலும், உயர்மட்ட பதவி வழக்குகள் தொடர்ந்து காவல்துறையினரால் விசாரிக்கப்படும் அல்லது விசாரிக்கப்படுகின்றன என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் கூறினார்.
அரசியல் காரணங்களை விட இந்த வழக்குகள் சட்டரீதியான செயற்பாடுகளை உள்ளடக்கியது என்று அவர் விளக்கினார்.
“விசாரணைகள் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சட்ட செயல்முறைகள், வழக்கம்போல நடந்து கொண்டிருக்கிறது. சட்டத்துறைத் தலைவர் மற்றும் நீதித்துறையின் கீழ் இதை யாரும் தடுக்க முடியாது” என்று நேற்று வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் மாற்றங்களை மையமாகக் கொண்ட சில உயர் வழக்குகளில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வழக்கும் அடங்கும். அவர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நஜிப்பைத் தவிர, அவரது மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் மீது சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளில் சூரிய சக்தி திட்டத்தை வழங்கவும் நிறுவவும் செய்யப்பட்ட திட்டம் தொடர்பாக நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் தொகையை கோரி இலஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி, 47 குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கியுள்ளார்.
தேசிய முன்னணி பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் மேம்பாட்டாளர் ஒருவரிமிருந்து 2 மில்லியன் ரிங்கி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.